சிம்பாப்வேயில் கொலரா நோயின் தாக்கத்தினால் இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந் நோயின் தாக்கத்தினால் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, நோய் பரவுவதை தடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புறநகர் பகுதிகளிலும், நோய் தாக்கம் அதிகம் உள்ள பகுதிகளிலும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டு வருவதுடன் இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மேலும், நோய் பரவுவதற்கு முக்கிய காரணிகளாக இருக்கக்கூடிய சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைத்து தூய்மையாக வைத்துக் கொள்ளவும், கழிவுநீர்குழாய்களை சீரமைக்க மக்கள் முடிந்த அளவு நிதியுதவி வழங்க வேண்டும் எனவும் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.