காணாமல் போன சவூதி அரேபிய பத்திரிகையாளர் ஜமாலுக்கு ஆதரவாக அவர் எழுதும் பத்திக்கான இடத்தினை வெற்றிடமாக விட்டு வோஷிங்டன் போஸ்ட் பத்திரிகை தனது பதிப்பினை வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட பக்கத்தில் வெள்ளையாக விடப்பட்ட அந்த பத்திக்கான இடத்துக்குமேல் மேல் எ மிஸ்ஸிங் எவாய்ஸ் ( A missing voice ) என்று தலைப்பிடப்பட்டு ள்ளது.
சவூதி அரேபியாவில் அந்நாட்டு கொள்கைகளை கடுமையாக விமர்சிக்கும் பிரபலமான பத்திரிகையாளரான ஜமால் என்பவர் கடந்த செவ்வாய்க்கிழமை துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவூதி அரேபிய தூதரகத்துக்கு சென்ற நிலையில் காணாமல் போயிருந்தார். ஜமால் வோஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் தொடர்ந்து எழுதி வருபவர் என்கின்ற நிலையிலேயே அப்பத்திரிகை மேற்கண்டவாறு பிரசுரித்துள்ளது.
இது தொடர்பாக கவலை வெளியிட்டுள்ள வோஷிங்டக் போஸ்ட் நாளிதழ் ஜமால் போன்ற நாட்டுப்பற்றாளர்களின் ஆரோக்கியமான விமர்சனங்களை இளவரசர் சல்மான் வரவேற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. அவரது வேலைகளை முடித்து தூதரக கட்டடத்தை விட்டு சென்றுவிட்டதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ள போதிலும் அவர் உள்ளேயே இருப்பதாக துருக்கி தெரிவித்துள்ளது.
முன்னர் சிரேஸ்ட சவூதி அரேபிய அதிகாரிகளுக்கு ஆலோசகராக இருந்த 59 வயதான ஜமால் அந்நாட்டு செய்தித்தாளில் எழுதி வந்த பத்தி நிறுத்தப்பட்ட பின்னர் அமெரிக்காவில் குடியேறிய நிலையில் பட்டத்து இளவரசரின் கொள்கைகளை பற்றி டுவிட்டரில் பதிவிடுவதை நிறுத்த வேண்டுமென வற்புறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.