குளோபல் தமிழ்ச் செய்தியாளர்….
திருவையாறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு இரணைமடு ஏற்று நீர்ப்பாசனத் திட்ட வாய்க்கால்களில் பல இடங்களில் மண் இடப்பட்டு தடுக்கப்பட்டுள்ளமையினால் அவற்றில் நுளம்புகள் காணப்படுவதோடு, கழிவுகளும் சேர்ந்து துர்நாற்றம் வீசுவதாகவும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
இரணைமடு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் திருவையாறு பிரதேசத்தில் ஏற்று நீர்ப்பாசனத்திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தும் வகையில் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பல குடும்பங்கள் தங்களது வீடுகளுக்கு செல்கின்ற பாதைகளில் காணப்படுகின்ற வாய்க்கால்களில் மண் நிரப்பி அதனூடாக பயணித்து வந்தனர்.
ஆனால் தற்போது பெய்துள்ள மழை காரணமாக வாய்க்கால் வழியே வழிந்தோடிய நீர் இவ்வாறு மண் இடப்பட்டு அடைக்கப்பட்டுள்ள பகுதிகளை கடந்து செல்ல முடியாது பல நாட்களாக தேங்கியிருப்பதனால் அந்த இடங்களில் நுளம்புகள் பெருக்கெடுத்துள்ளதோடு, கழிவுகளும் சேர்ந்து துர்நாற்றம் வீசுகின்றது. இந்த நிலைமை சுற்று சூழலில் வாழ்கின்ற பொது மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு வாய்க்கால்கள் மண் இடப்பட்டு அடைக்கப்பட்டுள்ள காணிகளில் பலவற்றில் பொது மக்கள் குடியிருப்பது இல்லை என்றும், வெளிநாடுகளிலும் வெளிமாட்டங்களிலும் வாழ்க்கின்ற மக்களின் காணிகளுக்கு முன்பாகவே அவற்றை பராமரிக்கின்றவர்களால் மண் இடப்பட்டு அடைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.