தனது கணவர் தொடர்பான விடயத்தில் நீதி வழங்கப்படாவிட்டால் நான் நீதியை கோரி மிகக்கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதாக காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார்.
இதன் முதல்கட்டமாக தனது கணவர் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்தக்கோரி பத்தாம் திகதி கண்டிதலதா மாளிகையின் முன்னாள் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.சந்தியா எக்னலிகொட முன்னெடுக்கவுள்ள இந்த போராட்டத்தில் காணாமல்போனவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
கடந்த 28 ம் திகதியிலிருந்து தான் ஆரம்பித்துள்ள 60 நாள் போராட்டத்தின் ஒரு பகுதியே இதுவென குறிப்பிட்டுள்ள அவர் தான் எதிர்கொண்டுள்ள அவலத்தினை வெளிப்படுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதமொன்றை இந்தவாரம் அனுப்பவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தனது துயரத்தினை வெளிப்படுத்தி ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதங்களிற்கு இதுவரை பதில் எதுவும் கிடைக்கவில்லை என்றும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.