ஹொங்கொங்கின் கிரிக்கெட் வீரர்களான இர்பான் அகமட், நதீம் அகமட், ஹசீப் அம்ஜத் ஆகியோர் ஐசிசி ஆட்ட நிர்ணய சூதாட்ட தடுப்பு விதிகளை 19 தடவைகள் மீறி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மூவருக்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த 3 வீரர்களும் 2015 உலகக்கிண்ண தகுதிச்சுற்று போட்டிகளின் போது சூதாட்ட முறைப்பாட்டில் சிக்கியுள்ளனர். சகோதரர்களான இர்பான் மற்றும் நதீம் 2016 இருபதுக்கு 20 உலகக்கோப்பையிலும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2014-ல் இடம்பெற்ற உலகக்கிண்ண தகுதி சுற்றில் கனடாவை ஹொங்கொங் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருந்தது, இதற்கு முன்பாக ஸ்கொட்லாந்துடன் விளையாடிய 2 போட்டிகளிலும் இவர்கள் மூவரும் கலந்துரையாடி மோசமாக விளையாடியதாக தெரிவிக்கப்பட்ட முறைப்பாடு நிரூபணமாகியுஞள்ளது. இந்தநிலையில் மூவருக்கு ஒக்டோபர் 8ம் திகதிமுதல் 14 நாட்கள் பதிலளிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளன.
28 வயதான தொடக்க வீரரும் வேகப்பந்து வீச்சாளருமான இர்பானுக்கு முன்னர் ஐசிசி சூதாட்ட விதிமுறைகளை மீறியமைக்காக இரண்டரை ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருந்தது. அப்போது அவர் தவறிழைக்கவில்லை என்ற போதிலும் சூதாட்டக்காரர்கள் தன்னை அணுகியதை இவர் முழு விவரத்துடன் ஐசிசிக்கு தெரியப்படுத்தவில்லை என குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.