குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
திருநெல்வேலியில் உள்ள அரச வங்கியின் கிளையில் அடகு நகைகளை மோசடி செய்தமை தொடர்பிலான விசாரணைகளுக்காக தடுத்துவைக்கப்பட்டிருந்த 143 அடகு நகைகளை 6 ஆண்டுகளின் பின் நீதிமன்றம் விடுவித்துள்ள நிலையில், நீதிமன்றக் கட்டளையின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி கிடைத்தவுடன், வங்கியின் நடைமுறைகள் சில நிறைவடைந்ததும் அடகு நகைகள் வாடிக்கையாளர்களுக்கு விடுவிக்கப்படும் என வங்கியின் தகவல்கள் தெரிவிகின்றன.
அடகு வைக்கப்பட்ட திகதியிலிருந்து நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட திகதிவரையான வட்டி மற்றும் முற்பணத்தைப் செலுத்தியதும் வாடிக்கையாளர்களுக்கு அடகு நகைகள் விடுவிக்கப்படும் என வங்கியின் தகவல்கள் தெரிவிகின்றன.
குறித்த அரச வங்கியின் திருநெல்வேலிக் கிளையின் அடகுப் பிரிவில் பணியாற்றிய உத்தியோகத்தர்களால் வாடிக்கையாளர்களின் நகைகள் கடந்த 2012ஆம் ஆண்டு மோசடி செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. அது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அதன் போது, வங்கிக் கிளையின் உத்தியோகத்தர் ஒருவர் கோப்பாய் காவற்துறையில் சரணடைந்திருந்தார். அவரால் நகைகள் சில கையளிக்கப்பட்டன. அதனை அடுத்து குறித்த உத்தியோகஸ்தர் உட்பட 6 உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளில் வங்கிக் கிளையில் வாடிக்கையாளர்களால் அடகு வைக்கப்பட்ட நகைகளில் ரூபா 10 கோடியே 67 லட்சத்துக்கும் மேற்பட்ட தங்க நகைகள் மோசடி செய்யப்பட்டதாக அறிய வந்தது.
இந்த வழக்கில் நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டுள்ள வாடிக்கையாளர்களின் நகைகளை விடுவிக்கவேண்டும் என்று முறைப்பாட்டாளரான வங்கி சார்பில் மன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டது.அதனை அடுத்து நீதிமன்றம் நகைகளை விடுவிக்க கட்டளையிட்டது.
இந்த நிலையில் நீதிமன்றின் கட்டளை சான்றுப்படுத்தப்பட்டு வழங்கப்பட்ட பின்னர், வங்கியின் சில நடைமுறைகள் நிறைவு செய்யப்பட்டு மிகவிரைவில் அந்த நகைகள் வாடிக்கையாளர்களுக்கு விடுவிக்கப்படும்.
அடகு வைக்கப்பட்ட தினத்திலிருந்து நீதிமன்றில் வழக்கு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதி வரையான வட்டியுடன் அடகு முற்பணைத்தையும் செலுத்தி வாடிக்கையாளர்கள் தமது நகைகளை மீளப்பெற்றுக்கொள்ள முடியும் என வங்கி தகவல்கள் தெரிவித்தன