குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்ப்பாணம், அச்சுவேலி பகுதியில் வீதியோரத்தில் புதைக்கப்பட்டிருந்த மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் சில நேற்று (11) வியாழக்கிழமை மீட்கப்பட்ட நிலையில் அவை தொடர்பில் மல்லாகம் நீதிமன்ற நீதிவான் இன்று வெள்ளிக்கிழமை விசாரணைகளை முன்னெடுத்தார்.
அச்சுவேலி – பத்தமேனி பகுதியிலுள்ள சூசையப்பர் வீதியில் மின்சார சபை ஊழியர்களினால் மின் கம்பம் நடுவதற்கு நிலத்தினை அகழ்ந்தபோது, மனித எலும்புக்கூட்டின் பாகங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டன. அவை தொடர்பில் சம்பவ இடத்துக்குச் சென்று மல்லாகம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா விசாரணைகளை முன்னெடுத்தார்.
நீதிவானுடன் யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரி மருத்துவ நிபுணர் உ.மயூரதன் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வுகளை முன்னெடுத்தார். அத்துடன், மீட்கப்பட்ட மனித எலும்புக் கூட்டின் பாகங்கள் இரசாயனப் பகுப்பாய்வுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.