குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
கரிற்றாஸ் வாழ்வோதய நிறுவனத்தினால் நடை முறைப் படுத்தப்படுத்தப்பட்டு வரும் சர்வமத செயற்பாடுகளின் ஒரு பகுதியான மதத்தலைவர்கள் மற்றும் அரச ஊழியர்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (12.10.18) மாலை வாழ்வுதய இயக்குனர் அருட்பணி செ.அன்ரன் அடிகளார் தலைமையில் மன்னார் வாழ்வோதயம் பொது மண்டபத்தில் இடம் பெற்றது.
இவ் நிகழ்வில் மன்னார் மறை மாவட்ட ஆயருடன் சிலாபம் மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த மும்மதங்களையும் பிரதி நிதித்துவப்படுத்தும் சர்வ மத பிரதி நிதிகள் மற்றும் அரச ஊழியர்கள், எனப் பலரும் கலந்து கொண்டனர்.
சமய தலைவர்கள் மற்றும் அரச ஊழியர்களுக்கான அறிமுக நிகழ்வும் அதனை தொடர்ந்து கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் நிகழ்வும் இறுதியில் பொதுக் கலந்துரையாடல்களும் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் மேலதிக செயற்பாடாக சர்வமத செயற்திட்டத்தின் நோக்கம் தொடர்பாகவும், கடந்த காலங்களில் செயற்படுத்தப்பட்ட செயற்பாடுகள் மூலம் அடையப்பட்ட விளைவுகள் தொடர்பான கலந்துரையாடல் நடாத்தப்பட்டதுடன் எதிர் வரும் காலங்களில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகளுக்கான திட்டமிடலும், ஆலோசனையும் இடம் பெற்றது. நேற்றைய (12.10.18) தினம் வருகை தந்த சர்வ மத குழுவினர் மன்னார் மாவட்டத்தில் மத ரீதியாக பிரசித்தி பெற்ற இடங்களை தரிசிக்கவுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் அடிக்கடி மத சின்னங்கள் இனம் தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டு வருகின்ற நிலையில் மத தலைவர்களிடம் ஒற்றுமை இல்லாத பட்சத்தில் மத நல்லிணக்கமானது சிதைவடைய கூடிய வாய்ப்பு காணப்படுகின்ற நிலையில் இவ்வாறான சர்வமத நல்லிணக்கத்திற்கான செயற்பாடுகள் அவசியம் என்பதும் குறிப்பிடத்தக்கது.