பாகிஸ்தானில் நீதிமன்ற நடவடிக்கையில் உளவுத்துறை தலையிடுகிறது என துறைப்பாடு தெரிவித்த இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சவுக்கத் அஜீஸ் சித்திக் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் ராணுவத்துக்கு அடுத்த நிலையில் அதிகாரம் செலுத்தும் அமைப்பாக ஐ.எஸ்.ஐ. என்னும் புலனாய்வுத்துறை செயல்பட்டு வருகின்றது.ஐ.எஸ்.ஐ. எல்லைதாண்டிய தீவிரவாதத்தினை ஊக்குவிப்பதுடன், அரசியல் நடவடிக்கைகளிலும் தலையீடு செய்வதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் பாகிஸ்தான் நீதித்துறை நடவடிக்கைகளிலும் ஐ.எஸ்.ஐ.யின் தலையீடு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் அண்மையில் இடம்பெற்ற மாவட்ட சட்டத்தரணிகள் சங்க கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய உயர்நீதிமன்ற நீதிபதி சித்திக் நீதிமன்ற நடவடிக்கைகளில் ஐ.எஸ்.ஐ. தலையிடுகிறது. தனது அதிகாரிகளைக் கொண்டு, வழக்குகளை விசாரிப்பதில் அமர்வுகளை அமைப்பது, வழக்குகளை குறிப்பிட்ட நீதிபதிகளுக்கு ஒதுக்குவது வரையில் ஐ.எஸ்.ஐ. தலையிடுகிறது என தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பில் பாகிஸ்தான் உச்சநீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் 5 நீதிபதிகளைக் கொண்ட குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அவரை பதவி நீக்கம் செய்ய முடிவு எடுத்து ஜனாதிபதியிடம் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் ஜனாதிபதி அவரை பதவி நீக்கம் செய்துள்ளார்.