குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அனுமதி பத்திரங்கள் இன்றி மணல் ஏற்றி சென்ற வாகனங்களை காவல்துறையினர் துரத்திய போது , காவல்துறையினர் மீது சரமாரியாக கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. வடமராட்சி வல்லிபுரம் ஆழ்வார் கோவிலை அண்மித்த பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை இந்த சம்பவம் இடம்பெற்று உள்ளது.
சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வுகள் இடம்பெறுவதாக பருத்தித்துறை காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் குறித்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றுள்ளனர்.அதன் போது மணல் அகழ்வில் ஈடுபட்டு இருந்த வாகனங்கள் காவல்துறையினரைக் கண்டதும் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில் காவல்துறையினர் குறித்த வாகனங்களை துரத்தி சென்றுள்ளனர்.
சுமார் ஐந்து கிலோ மீற்றர் தூரம் காவல்துறையினர் வாகனங்களை துரத்தி சென்ற நிலையில் முள்ளி பகுதியில் காவல்துறையினரைக் கண்டு ஓடிய வாகனங்கள் சடுதியாக நிறுத்தப்பட்டு உள்ளன.அதனை அடுத்து காவல்துறையினர் வாகனங்களை நெருங்கிய போது வாகனத்தில் இருந்து காவல்துறையினர் மீது சரமாரியாக கல் வீச்சில் ஈடுபட்டனர். திடீர் கல்வீச்சு தாக்குதலினால் காவல்துறையினர் நிலை குலைந்து நின்றதை அடுத்து மீண்டும் வாகனங்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளன.குறித்த சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.