Home இலங்கை அரசியற் கைதிகள் விடுவிக்கப்படவில்லை – வாக்குறுதிகளே வழங்கப்பட்டுள்ளன – நிலாந்தன்..

அரசியற் கைதிகள் விடுவிக்கப்படவில்லை – வாக்குறுதிகளே வழங்கப்பட்டுள்ளன – நிலாந்தன்..

by admin

ஒரு சிவில் செயற்பாட்டாளர் என்னிடம் கேட்டார். அரசியற்கைதிகளின் போராட்டம் எனப்படுவது பிரதானமாக சிறைக்கு வெளியிலேயே முன்னெடுக்கப்பட வேண்டிய ஒன்று. எனவே இது தொடர்பில் சிறைக்கு வெளியே போராட்டத்தை முன்னெடுக்கக் கூடிய தரப்புக்களோடு கைதிகள் தமது போராட்டத்தைக் குறித்து திட்டமிட்டவர்களா? இப்போராட்டம் ஏன் கடந்த ஆண்டு தோல்வியுற்றது என்பதைக் குறித்து ஆழமாக ஆராயப்பட்டதா? உணவை ஓர் ஆயுதமாக எத்தனை தடவைகள் பயன்படுத்தலாம்? கடந்த ஆண்டு கைதிகளுக்கு வாக்குறுதி வழங்கி போராட்டம் முடித்து வைக்கப்பட்ட போது அதிலிருந்து மாணவப்பிரதிநிதிகள் அவ்வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்ற முடியாமல் போயிற்று என்பதைக் குறித்து ஆழமாக ஆராய்ந்தவர்களா? அப்படி ஆராய்ந்த பின்னர்தான் இம்முறை நடை பயணம் என்ற ஒரு போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்களா? சிறைக்கு வெளியே போராட்டத்தை முன்னெடுக்கும் அமைப்புக்கள் அப்போராட்டத்தின் மூலம் கைதிகளை விடுவிக்கலாம் என்று நம்புகிறார்களா? அப்படியென்றால் கடந்த தடவைகள் ஏன் போராட்டங்கள் இறுதி வெற்றியைப் பெறவில்லை என்பதைக் குறித்து அந்த அமைப்புக்கள் மத்தியில் ஆழமாக ஆரயாயப்பட்டதா? இது கைதிகளின் விடயத்தில் மட்டுமல்ல காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டம், காணிகளை மீட்பதற்கான போராட்டம் முதலாய் தமிழ் பரப்பில் நிகழ்ந்து வரும் எல்லாப் போராட்டங்களுக்கும் பொருந்தக்கூடிய ஒரு விமர்சனம். இப் போராட்டங்கள் யாவும் ஏன் இன்றளவும் இறுதி வெற்றியைப் பெறவில்லை? அவை நீர்த்துப் போகவும், தொய்வடையவும் காரணங்கள் எவை? இவை தொடர்பாக போராடும் மக்கள் மத்தியிலும் போராட்டத்திற்கு ஆதரவான அமைப்புக்கள் மத்தியிலும், அரசியல்வாதிகள் மத்தியிலும் விடயங்கள் ஆழமாக ஆராயப்பட்டுள்ளனவா? அரசாங்கத்தின் மீதோ அல்லது வெளியுலகத்தின் மீதோ அழுத்தங்களைப் பிரயோகிக்கும் விதத்தில் இப் போராட்டங்கள் உச்சம் பெறாமைகைகுக் காரணம் என்ன?

அவருடைய கேள்விகள் நியாயமானவை என்பதைத்தான் நேற்று கைதிகளின் போராட்டம் முடித்து வைக்கப்பட்டவிதம் காட்டுகிறது.முன்னைய தடவைகளைப் போலவே இந்தத்தடவையும் அரசாங்கம் அல்ல தமிழ்த்தலைவர்கள் வாக்குறுதியளித்ததன் பேரில் உண்ணாவிரதம் முடித்து வைக்கப்பட்டிருக்கிறது. அதாவது கைதிகள் விடுவிக்கப்படவில்லை வாக்குறுதிகள்தான் வழங்கப்பட்டுள்ளன.ஆட்சி மாற்றத்தின் பின் கைதிகள் இதுவரை ஆறு தடவைகள் போராடி விட்டார்கள்.இம்முறை அவர்கள் முப்பது நாட்கள் போராடினார்கள். ஆனால் அரசாங்கம் இறங்கிவரவில்லை. ஆயின் அரசாங்கத்தின் மீது இறங்கி வரத்தக்க அழுத்தங்களை யார் பிரயோகிப்பது?;; அரசாங்கம் கைதிகளை விடுவிக்கும் ஒரு முடிவை எடுக்கத்தக்க விதத்தில் அழுத்தம் பிரயோகிக்கப்படவில்லை என்பதே உண்மை. இதுவரை மேற்கொள்ளப்பட்ட எல்லாப் போராட்டங்களிலும் அவ்வாறு நெருக்குதல் கொடுக்கப்படாத காரணத்தால்தான் கைதிகளின் விடுதலை இழுபட்டுச் செல்கிறது

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் நடை பயணம்; வித்தியாசமானது. யாழ்ப்பாணத்திலிருந்து அநுராதபுரம் வரையிலும் நடப்பது என்பது விளையாட்டு அல்ல. ஒரு கட்டத்தில் பாதங்கள் கொப்பளித்து விடும். தொடர்ந்து நடக்கும் போது தொடைகள் உரசுப்பட்டு அப்பகுதி புண்ணாகிவிடும். ஓய்வெடுத்து நடக்கும் பொழுது ஓய்வில் நேரம் குறைவாக இருந்தால் ஓரளவிற்குச் சமாளிக்கலாம். ஆனால் கிட்டத்தட்ட ஒரு இரவு ஓய்வெடுத்தபின் மறுநாட் காலை நடக்கும் பொழுது உடல் முழுதுவதும் வலிக்கும். வழியில் அவர்கள் மழைக்குள் நனைத்துமிருக்கிறார்கள். இப்படிப் பார்த்தால் மாணவர்களின் போராட்டம் சாதாரணமானது அல்ல. கைதிகளின் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தைப் போல அதுவும் வலி மிகுந்த ஒன்றே. இம்முறை நடை பயணத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரமுகர் ஒருவரும் பங்குபற்றியிருக்கிறார்.
மாணவர்கள் நடக்கத் தொடங்கிய பின்னணியில் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பைச் சேர்ந்த அருட்தந்தை சக்திவேலும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வெகுசன அமைப்புக்களும் அரங்கில் குதித்தனர். முதலில் முதலமைச்சர் விக்கினேஸ்வரனோடு கதைத்து கைதடியில் அவருடைய அலுவலகத்தில் உள்ள கேட்போர் கூடத்தில் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அடுத்த நாள் அதாவது கடந்த வெள்ளிக்கிழமை விக்கினேஸ்வரனின் தலைமையில் அச்சந்திப்பு நடைபெற்றது. வெகுசன அமைப்புக்களும் கட்சித்தலைவர்களும் மதகுருக்களும் அரசியல் கைதிகளாக இருந்து விடுவிக்கப்பட்டவர்களும், ஊடகவியலாளர்களும் அதில் பங்குபற்றினர்.

அரசாங்கத்தின் மீது எப்படி அழுத்தத்தைப் பிரயோகிக்கலாம் என்று அங்கு கலந்தாலோசிக்கப்பட்டது. இதுவரையிலுமான வெகுசனப் போராட்டங்களை அரசாங்கம் பொருட்படுத்தவில்லை. அவ்வாறு சில போராட்டங்களைப் பொருட்படுத்திய போதிலும் முழுமையான தீர்வுகளை வழங்கவில்லை. எனவே அரசாங்கத்தை இறங்கிவரச் செய்ய எப்படி நிர்ப்பந்திப்பது என்பது தொடர்பாக அங்கு கலந்தாலோசிக்கப்பட்டது. இது பட்ஜெட் காலம். எனவே வரவு – செலவுத்திட்டத்தின் மீதான வாக்கெடுப்பின் போது அதை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் பேரம் பேசுவதற்குரிய ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்த வேண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டது. கைதிகளை விடுதலை செய்யாவிட்டால் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவு – செலவுத் திட்டத் திற்கு எதிராக வாக்களிப்பது என்று முடிவெடுக்குமாறு கூட்டமைப்பைத்தூண்ட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. அப்படி கூட்டமைப்பு நிபந்தனை விதித்தால் அரசாங்கம் இறங்கிவர வேண்டிய ஒரு கட்டாயம் ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. கைதிகளை விடுவிப்பதற்கு இப்போதிருக்கும் உடனடியான அழுதப் பிரயோக உத்தி அது ஒன்றுதான்.எனவே கூட்டமைப்பின் தலைமையானது அப்படியொரு நிபந்தனையை முன்வைத்து அறிக்கைவிட வேண்டுமென்று அவர்களிடம் கேட்டுக்கொள்வது என்று அச்சந்திப்பில் முடிவெடுக்கப்பட்டது.

கூட்டமைப்பு முடிவெடுக்குமோ இல்லையோ வெகுசன அமைப்புக்கள் கூட்டமைப்பை நிர்ப்பந்திக்கும் விதத்தில் கைதிகளுக்கு ஆதரவாக தமது பலத்தைக் காட்ட வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. அதே சமயம் வெகுசன அமைப்புக்கள் அவ்வாறு எதிர்ப்பைக் காட்டுவதற்கு முன்பு கைதிகளின் உண்ணாவிரதத்தை முடிவிற்குக் கொண்டு வரவேண்டும் என்றும் ஆலோசிக்கப்பட்டது. ஏனெனில் கைதிகள் போராடுவது சாவதற்காக அல்ல. வாழ வேண்டும் என்பதற்காகத்தான். உணவை ஓர் ஆயுதமாக கையாள்வதுதான் அவர்களுக்குள்ள ஒரே போராட்ட வழிமுறையாகும். இவ்வாறு உணவை ஒறுத்துப் போராடும் போது ஒவ்வொரு முறையும், அவர்களுடைய உள்ளுறுப்புக்கள் பாதிக்கப்புறுகின்றன. இதனால் அவர்கள் விடுதலையான பின்னரும் ஆரோக்கியமாக வாழ முடியுமா? என்ற கேள்வியுண்டு. எனவே உணவை ஓர் ஆயுதமாக வைத்துப் போராடும் இப்போராட்டத்தை முதலில் முடிவிற்குக் கொண்டு வரவேண்டும் என்று பெரும்பாலானவர்கள் அபிப்பிராயப்பட்டார்கள். இதுதான் முடிவென்றால் அதைக் கைதிகளுக்குத் தெரிவித்து போராட்டத்தை வெகுசன அமைப்புக்கள் பொறுப்பேற்று கைதிகளை போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்க வேண்டும். அதை அடுத்தடுத்த நாட்களுக்குள் செய்வது என்றும் இதில் மாணவர்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி நேற்று கைதிகளின் உண்ணாவிரதம் முடித்து வைக்கப்பட்டது.

ஆனால் இதில் உள்ள குரூரம் என்னவென்றால் கைதிகள் போராடும் போதுதான் சிறைக்கு வெளியே உள்ள அமைப்புக்கள் தூண்டப்படுகின்றன. கைதிகள் போராடாவிட்டால் சிறைக்கு வெளியில் ஒரு கொதிநிலையை ஏற்படுத்த வெகுசன அமைப்புக்களே உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இதுவரை கைதிகளுக்காக முழுக் கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் போன்றன மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் அரசாங்கம் அசையவே இல்லை. ஆயின் அரசாங்கத்தை அசைக்கும் விதத்தில் எப்படிப் போராடுவது? இது முதலாவது கேள்வி.

இரண்டாவது கேள்வி கைதிகளுக்கு யார் என்ன வாக்குறுதியை வழங்குவது?
அரசாங்கத்தோடு பேசி அல்லது அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகித்து ஒரு முடிவைப் பெற்றுத்தருவதாக மக்கள் பிரதிநிதிகளே வாக்குறுதியளித்து கைதிகளின் உண்ணாவிரதத்தை முடித்து வைப்பதுண்டு.கடந்த ஆண்டுகளில் மக்கள் பிரதிநிதிகளால் வழங்கப்பட்ட எல்லா வாக்குறுதிகளும் காலாவதியாகிவிட்டன. கைதிகள் அவ்வாறான வாக்குறுதிகளை நம்பத் தயாரில்லை. அப்படியென்றால் வாக்குறுதியளித்ததன் பிரகாரம் அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்குமாறு குறிப்பாகக் கைதிகளின் விடயத்தில் அரசாங்கம் கைதிகளை விடுவிக்கும் ஒரு முடிவை எடுக்கத்தக்க விதத்தில் அழுத்தம் பிரயோகிக்கப்படவில்லை என்பதே உண்மை. இதுவரை மேற்கொள்ளப்பட்ட எல்லாப் போராட்டங்களிலும் அவ்வாறு நெருக்குதல் கொடுக்கப்படாத காரணத்தால்தான் கைதிகளின் விடுதலை இழுபட்டுச் செல்கிறது. ஓர் அரசியல் பேரத்தின் மூலம்தான் அரசாங்கத்தை அசைக்கலாமென்றால் அப்பேரத்தை மக்கள் பிரதிநிதிகளுக்கூடாகவே செய்ய வேண்டும். எனவே மக்கள் பிரதிநிதிகள் மீது அவ்வாறு செய்யுமாறு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டியிருக்கிறது என்று பொருள்.

கடந்த ஆண்டு யாழ்ப்பாணம் ரெம்பிள் றோட்டில் கைதிகளை விடுவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சந்திப்பில் இது சுட்டிக்காட்டப்பட்டது. மக்கள் பிரதிநிதிகளை எப்படி நெருக்குவது? என்றெல்லாம் ஆலோசிக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் பிரதிநிதிகளை அவர்களுடைய அலுவலகங்களில் சுற்றி வளைப்பது அல்லது அவர்களுடைய வாகனங்களை இடைமறிப்பது என்றெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு சிலர் ஆலோசனை கூறினார்கள். அதன் விளைவாக அச்சந்திப்பானது யாருக்கு எதிரான போராட்டம்? அராங்கத்திற்கு எதிரானதா? அல்லது கூட்டமைப்பிற்கு எதிரானதா? என்ற ஒரு மயக்கம் ஏற்படத்தக்க ஓர் உணர்;ச்சிகரமான திருப்பத்தை அடைந்தது. எனினும் சந்திப்பிற்குத் தலைமை தாங்கிய அருட்தந்தை சக்திவேலும், வேறு சிலரும் நிலமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்கள்.

அன்றைய சந்திப்பில் பங்குபற்றிய விடுவிக்கப்பட்ட அரசியல்கைதி ஒருவர் கடந்த வாரம் கைதடியில் இடம்பெற்ற சந்திப்பிலும் பங்குபற்றினார். 2015ம் ஆண்டு சம்பந்தர் தமக்கு வழங்கிய வாக்குறுதியொன்றை அவர் நினைவு கூர்ந்தார். ‘நான் கடவுளை நம்புகிறேன். மைத்திரியை நம்புகிறேன். நீங்கள் என்னை நம்புங்கள், போராட்டத்தைக் கைவிடுங்கள்’ என்ற தொனிப்பட அவர் வாக்குறுதி வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார். இப்பொழுது மூன்று ஆண்டுகளின் பின் அந்த வாக்குறுதிகள் வெளிறிப்போயிருக்கும் ஒரு பின்னணியில் மறுபடியும் கூட்டமைப்பின் தலைமையிடம் வெகுசன அமைப்புக்கள் ஒரு வேண்டுகோளை விடுத்திருக்கின்றன.

இக்கட்டுரை எழுதப்படும்; போது கிடைத்த செய்திகளின்படி வாற கிழமை நடுப்பகுதியளவில் இது தொடர்பான சந்திப்புக்கள், பேச்சுக்கள் இடம்பெறலாம் என்று தெரிகிறது. அப்பேச்சுகள் வெற்றி பெறாவிட்டால் கூட்டமைப்பு பட்ஜெட் வாக்கெடுப்பில் அரசாங்கத்தை எதிர்த்து வாக்களிக்கும் என்று மாவை சேனாதிராஜா கைதிகளிடம் வாக்குறுதியளித்ததாகவும் அதன்பின் உண்ணாவிரதம் அருட்தந்தை சக்திவேல் உட்பட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சிலரால் முடித்து வைக்கப்பட்டதாகவும் தெரிகிறது.இதில் பல்கலைக்கழக மாணவர்கள் பங்கு பற்றவில்லை என்றும் தெரிகிறது. ஆனால்,கைதிகளின் போராட்டமும் மாணவர்களின் நடை பயணமும்தான் மாவை அவ்வாறு வாக்குறுதி வழங்கக் காரணமாகும்.

பன்னிரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகளை படிப்படியாக விடுவித்து இப்பொழுது சிறிய தொகையே மிச்சமிருக்கிறது. எனவே இந்தப் பிரச்சினைக்கும் அரசாங்கத்தோடு பேசி ஒரு முடிவைக் காணலாம் என்று கூட்டமைப்பு நம்புகிறதோ தெரியவில்லை. ஆனால் பன்னிரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்களை விடுவித்தமை என்பது புனர்வாழ்வின் பின்புதான.; ஏற்கெனவே விடுவிக்கப்பட்ட ஒரு தொகுதி அரசியற்கைதிகளும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழான விசாரணைகள் அல்லது தண்டணைகளின் பின்னரே விடுவிக்கப்பட்டார்கள். இங்கு புனர்வாழ்வு, விசாரணை, தண்டனை போன்ற அனைத்தும் அரசியற் கைதிகளை பயங்கரவாதிகளாகவே பார்க்கின்;றன. அவர்களுடைய போராட்டத்தைப் பயங்கரவாதமாகவே பார்;க்கின்றன. எனவே இங்கு தேவைப்படுவது சட்ட ரீதியிலான தீர்மானம் அல்ல. ஓர் அரசியல் தீர்மானம்தான். அத்தீர்மானத்தை எடுக்கத் தேவையான துணிச்சல் அரசாங்கத்திடம் இல்லையென்றால் அவர்களோடு பேசிக்கொண்டிருக்க முடியாது. அழுத்தப் பிரயோக அரசியலை முன்னெடுப்பதே வழி. அதாவது அரசாங்கத்திற்கு நோகக் கூடிய விதத்தில் எதிர்ப்பைக் காட்ட வேண்டும். இல்லையென்றால் இம்முறையும் கைதிகளின் விடுதலை சொதப்பப்பட்டு விடும். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டம் மற்றும் காணிகளை மீட்டெடுப்பதற்கான போராட்டங்கள் சொதப்பப்பட்டதைப் போல இதுவும் சொதப்பப்பட்டு விடும். அரசியல் கைதிகள் அரசியல் அநாதைகளாக்கப்பட்டு விடுவார்கள்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More