மீரூ கவனயீர்ப்பின் ஊடாக வெளிவரும் நடிகைகள்மீதான பாலியல் முறைப்பாடுகள் தொடர்பாக விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை அமைக்கவுள்ளதாக நடிகர் சங்கம் அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால் அறிவித்துள்ளார்.
அண்மையில் ஹிந்தி நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் முறைப்பாட்டை தெரிவித்தார். சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் அச்சுறுத்தல்களையுட் பொருட்படுத்தாமல் தனுஸ்ரீ தத்தா தொடர்ந்து பாலியல் முறைப்பாட்டை முன்வைத்தார்.
இதேவேளை சமூக வலைதளங்களில் ‘மீரூ’ ஹாஷ்டக் தொடங்கப்பட்டது. அதில் பல பெண்கள் தமது பாலியல் முறைப்பாடுகளை வெளியிட்டு வருகின்றனர். இதன்போது, இந்திய மத்திய மந்திரி எம்.ஜே. அக்பர் மீது பெண் ஊடகவியலாளர் ஒருவர் பாலியல் முறைப்பாடு தெரிவித்தார்.
தென்னிந்தியாவில் முதல் முறையாக பிரபல பின்னணி பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை வெளியிட்டார். சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழா மற்றும் சுவிட்சர்லாந்தில் நடந்த இசை நிகழ்ச்சி என பல இடங்களில் தனக்கு வைரமுத்து பாலியல் துன்பறுத்தல் கொடுத்ததாக கூறினார்.
அத்துடன் இன்னமும் பல பாடகிகள் வைரமுத்துவால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார் சின்மயி. சின்மயிக்கு நடிகைகள் சமந்தா, வரலட்சுமி, ஆன்ட்ரியா, நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சித்தார்த் உள்பட பலர் ஆதரவு தெரிவித்தனர். நடிகர் கமல்ஹாசன், கனிமொழி எம்.பி. போன்றோரும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து கருத்து வெளியிட்டனர்.
இதுபற்றி நடிகர் சங்க பொதுச்செயலாளர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவரான விஷாலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். திரையுலகில் பாலியல் ரீதியாக பாதிப்புக்கு உள்ளாகும் பெண்களுக்கு என்ன தீர்வு காணப்போகிறீர்கள்? என்ற கேள்வியை பலரும் முன் வைத்தனர். பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது கூறியிருக்கும் பாலியல் புகார் நிரூபிக்கப்பட்டால், நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ் திரையுலகில் மீரூ விவகாரம் தொடர்பாக விசாரிப்பதற்கென்றே 3 பேரை கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட உள்ளதாகவும் இளைய கலைஞர்கள் முதல் மூத்த கலைஞர்கள் வரை முறைப்பாடு செய்யலாம் என்றும் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் குழுவில் நடிகர்-நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோரது பிரதிநிதிகள் தலா ஒருவர் இடம் பெறுவார்கள் என்றும் விஷால் தெரிவித்தார்.
முன்னதாக, ‘மீ ரூ’வில் வரும் பாலியல் முறைப்பாடுகளை விசாரணை செய்ய இந்திய மத்திய அரசு சார்பில் குழு அமைக்கப்படும் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தி அறிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.