சனி முழுக்கு 13 – பொஸிற்றிவ் பொன்னம்பலம்…
காலங்கடந்த சிந்தனை எண்டு கனக்கக் கதையாதையுங்கோ.ஒரு மனுசனுக்குச் சிந்தனை எப்பவும் வரலாம். ஆனால் அது ஆரோக்கியமா இருக்க வேணும். உதைத்தான் நான் அடிக்கடி பிறருக்கு சொல்லுறது. நல்ல சிந்தனையை மனசுக்கை வளருங்கோ உடம்பு ஆரோக்கியமா இருக்கும். சிந்தனையள் பிழைச்சால் பிறகு சிக்கல் வரும். கன பேருக்கு அது விளங்குதில்லை. சொல்லப்போனால் வில்லங்கம். பிழையா விளங்கிக்கொண்டு சண்டைக்கு வந்திடுதுகள். என்ன செய்யிறது? எங்களைப்போல ஆக்கள் அவைக்கு யாரியா நிக்கேலுமோ? ஒரு கையைாலை வாயைப் பொத்திக் கொண்டு மற்றக் கையாலை பின்பக்கத்தைப் பொத்திக் கொண்டு இருக்கிறம். என்ன? புசத்திறன் எண்டு பாக்கிறியளே!
நேற்றைக்கு என்ரை சகலன் வல்லிபுரத்தின்ரை பேத்தி பெடியோடை வந்தவள். கன்னி கழியாமல் பொன்சரிலை சுவிஸுக்குப் போனவள்.இப்ப கையிலை ஒண்டை பிடிச்சுக் கொண்டு வந்திருக்கிறாள். கதைக்குக் கதை மாமா ! மாமா! எண்டு கூப்பிட்டுக் கதைச்சவள். அவள் இன்னும் என்னை மறக்கேல்லை. பெடி கொஞ்சம் குழப்படி. ஆனால் எங்கடையள் மாதிரி இல்லை. “றொனி. றொனி” எண்டு பெடியை அடிக்கடி அவள் கூப்பிட்டாள். “இஞ்சை எத்தினை நல்ல பேர் இருக்க ஏனடி பிள்ளை பெடிக்கு இப்பிடி ஒரு பேரை வைச்சிருக்கிறாய் ? உனக்குத் தெரியுந்தானே இஞ்சை உந்தப் பேரை எதுக்கு வைக்கிறவை எண்டு” – எண்டு கேட்டன். சிரிச்சாள்.சிரிச்சுப்போட்டுச் சொன்னாள் “அங்கிள் இஞ்சை மாதிரி உப்பிடிப் பேரை வைச்சால் அங்கை உள்ள வெள்ளையள் – சிலபேர் தோசை சுடுகிறன் எண்டு றொட்டி சுடுவினம். அது மாதிரி – மாத்தி மாத்தி எழுதுவங்கள். அதாலை சிக்கல் கனக்க. இது றொனி எண்டு பிள்ளையின்ரை பேரை வடிவாப் பிசகாமல் எழுதுவங்கள். கூப்பிடுவங்கள் ஒரு பிரச்சினையும் இல்லை. எங்கடை பேருகள் அங்கை படுகிற பாட்டைப் பாத்தால் சிரிப்பு வரும். எங்கடை அப்பான்ரை பேரை வல்லிபுரம் எண்டு எழுதிறத்துக்கிடையிலை அங்கை உள்ள வெள்ளையள் படுகிறபாட்டைப் பாக்க வேணும். ஒரு நாள் “வாலிபும்” எண்டு ஒருத்தி எழுதிப்போட்டாள். பிறகு அவளுக்கு நான் தமிழ் வகுப்பெடுத்துத் திருத்தப்பட்ட பாடு. என்ன செய்யிறது?பிழைதான். அங்கை உந்தத் தமிழ் பண்பாடு கலாச்சாரம் எல்லாம் பாத்துச் சீவிக்கேலாது. – எண்டு ஒரு பிரசங்கத்தைச் செய்துபோட்டுப் போட்டாள்.
அது ஒரு வகையிலை உண்மைதான். ஏன் சுவிஸுக்கப் போவான். பண்டு எங்கடை சேனாதிராசாவின்ரை பேர் பட்ட பாடு தெரியுமே? தாய் தேப்பன் உந்தப் பெரிய பேரை வைச்சிட்டு வீட்டிலை அதைச் சுருக்கி அவனை “ராசா” எண்டு கூப்பிட்டினம். ஊரிலை படிக்கேக்கை இடாப்பிலை எல்லாம் ஒழுங்காத்தான் இருந்தது.ஊரிலை வெளிமேலை விளையாடக் கிளையாடப் போனால் பெடியள் அவனைச் “சேனாதி” எண்டினம். பிறகு பேராதெனியாவுக்குப் படிக்கப் போனவன். அங்கை உள்ள சிங்களவங்கள் அவனை “சேன” எண்டு கூப்பிட்டவை. பிறகு கொஞ்ச நாள் போய் இந்தியாவிலை படிச்சவன். அங்கை சேனாதி எண்டதைச் சுருக்கி ”ஆதி” ஆக்கினாங்கள். பிறகு திரிப்பி இஞ்சை வந்து மட்டக்களப்பிலை கொஞ்ச நாள் வேலை செய்யேக்கை “ராஜா” எண்டாங்கள். பிறகு அவன்ரை செத்தவீட்டு நோட்டீசிலைதான் முழுசாப் பேரை அடிச்சதைப் பாத்தனான். ஆனால் அந்த நோட்டீசிலை அடைப்புக்கையும், பேப்பரிலை போட்ட அறிவித்தலிலையும் அவன்ரை எல்லாப் பேரையும் போட வேண்டியதாப் போச்சுது.அப்ப தானே அந்தந்த ஆக்களுக்கு விளங்கும்.
பேர் வைக்கிறதும் ஒரு கலை. அதுக்கும் எங்கடை பஞ்சாங்கத்திலை எத்தினை சாத்திரம் இருக்கு. ஆனால் பெடிச்சி சொன்ன மாதிரி நீளமான பேரை வைக்கிறதாலை பல சிக்கல் வாறது வழமைதான். ஒருதரும் ஒருநாளும் முழுப்பேரை வைக்கிறேல்லை. என்ன நல்ல பேரை வைச்சாலும் அமத்தி, அடிச்சு நெழிச்சு அந்தப் பேருக்கு ஒரு ரிங்கர் வேலை செய்து சுருக்கித்தான் கூப்பிடுவினம்.இதுக்கை ஒரு வழமை பேரைச் சொல்லாமல் அவை செய்யிற தொழிலை வைச்சு அவையளைக் கூப்பிடுறது. வைத்தியர், பரியாரி, கட்டாடி, வாத்தியார், டாக்குத்தர் … எண்டு அப்பிடிக் கனக்க இருக்கு.
எண் சாத்திரத்திலை என்ன சொல்லுறான் எண்டால் வைச்ச பேரை அப்பிடியே கூப்பிட வேணுமாம். அங்கை ஒலிக்குத்தான் முதலிடம். வைச்ச பேரை உடைச்சுக் கூப்பிட்டால் எத்தினை உடைவு வருகுதோ அத்தினை உடைவு அவையின்ரை வாழ்க்கையிலை இருக்குமெண்டு ஒரு எண்சாத்திரத்தைப் பற்றி எழுதேக்கை ஒருதர் எழுதினதை வாசிச்சனான்.
அப்ப பாருங்கோ எல்லாத்திலையும் ஒரு நுணுக்கம், நுட்பம் இருக்கு எண்டதை விளங்கிக் கொள்ள வேணும். ஒருதருக்குப் பேர் அமையிறதும் ஒரு சிறப்பு. சிலரைப் பாருங்கோ பேருக்கேத்தமாதிரியே அவையின்ரை சீவியம் இருக்கும். இப்பிடிச் சொல்லுறன் எண்டு சிரியாதையுங்கோ ஏறுக்கு மாறா இருக்கிறதும் உண்டு. உவன் எங்கடை சத்தியன் வாய் திறந்தால் உண்மை சொல்லான். தருமன் படு கஞ்சன். தருமம் எண்டால் என்ன எண்டு கேப்பன். லட்சுமி தோஞ்சு குளிக்கிறது குறைவு. வீட்டை போய்ப் பாருங்கோ படு குப்பை. சரஸ்வதிக்கு எழுத வாசிக்கத் தெரியாது. வீரசிங்கம் செத்த சாவட்டை மாதிரி. ஆரேன் வெருட்டினா “ஐயோ. என்ரை ஆச்சி” எண்டு கத்திக் கொண்டு ஓடி ஒழிக்கிறதுதான் அவன்ரை முதல் வேலை. அப்ப எது சரி? எது பிழை? எண்டு எனக்குத் தெரியேல்லை. இதை உங்களிட்டையே விட்டிடுறன். நீங்களே யோசிச்சு ஒரு முடிவெடுங்கோவன்.
- பொஸிற்றிவ் பொன்னம்பலம்