விஐபி ஹெலிகொப்டர் கொள்முதல் ஊழல் வழக்கில் 431 கோடி ரூபா லஞ்சம் வழங்கப்பட்டதற்கான ஆவணங்களை சிபிஐ கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்திடம் இருந்து 3700 கோடி ரூபாவுக்கு 12 நவீன ஹெலிகொப்டர்கள் வாங்கியதில் இடைத்தரகர்கள் மூலம் இந்தியர்களுக்கு லஞ்சம் கைமாறியதாக எழுந்த குற்றச்சாட்டை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் பிரித்தானியாவினைச் சேர்ந்த இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் என்பவரை அண்மையில் கைது செய்துள்ள சிபிஐ தற்போது காவலில் வைத்து விசாரித்து வருகிறது.
இந்நிலையில் இடைத்தரகர்கள் கிறிஸ்டியன் மைக்கேல், கெய்டோ ஹஸ்ச்கி ஆகியோருக்கு அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனம் இந்தியாவில் வழங்க ஒப்புக்கொண்ட 58 மில்லியன் யூரோவில் 54 மில்லியனை வழங்கியதற்கான ஆவணங்களை சிபிஐ கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் லஞ்சம் வழங்கப்பட்ட இந்தியர்களை சிபிஐ நெருங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.