“ஏக்கிய ராஜ்ஜிய என்றால் ஒருமித்த நாடு என்றே புதிய அரசமைப்பு வரைவுக்கான இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும் இறுதி அரசியலமைப்பிலும் அவ்வாறே இடம்பெறும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதிமொழியை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
‘அரசமைப்பில் ஏக்கிய ராஜ்ஜிய என்ற சொல் மூன்று மொழிகளிலும் இருக்கும் என்றும் தமிழில் ஒருமித்த நாடு என்ற பதத்தை இணைக்கும் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் சபை முதல்வருமான அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் கொழும்பு தமிழ் ஊடகம் ஒன்று கருத்து தெரிவித்த இரா. சம்பந்தன், புதிய அரசமைப்பு வரைவுக்கான இடைக்கால அறிக்கையில் இது தொடர்பில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளதாகவும் ஏக்கிய ராஜ்ஜிய என்றால் ஒற்றையாட்சி என்ற குழப்பம் இருந்தது. ஆனால், இடைக்கால அறிக்கையில் ஒருமித்த நாடு என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதேவேளை, இந்தச் சொல்லை வைத்து தமிழ் மக்களிலும், சிங்கள மக்களிலும் சில தனி நபர்கள் சுயலாப அரசியல் செய்வதாகவும் குற்றம் சுமத்திய அவர், இச் சொல் நாட்டின் மூன்று இனமக்களின் அரசியல் தீர்வுடன் சம்பந்தப்பட்ட நல்லிணக்கத்துக்கு மூல காரணமாக அமையும் சொல் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னர் புதிய அரசமைப்புக்கான வரைவு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
2016ஆம் ஆண்டு இறுதிக்குள் தீர்வு, 2017ஆம் ஆண்டு இறுதிக்குள் தீர்வு, 2017ஆம் ஆண்டு தீபாவளிக்குள் தீர்வு, 2018ஆம் ஆண்டு தீபாவளிக்குள் தீர்வு என்று தொடர்ச்சியாகக் கூறிவந்தீர்கள்? ஆனால், எதுவும் நடைபெறவில்லை. எப்போது தீர்வு வரும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கேள்வி எழுப்பட்டுள்ளது.
நம்பிக்கை அடிப்படையில் அவ்வாறு கூறியதாகவும் அரசியல் சூழ்ச்சியால் அந்த நம்பிக்கை நிறைவேறாமல் போய்விட்டதாகவும் கூறிய அவர், பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னர் புதிய அரசமைப்புக்கான வரைவு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என நம்புவதாகவும் சம்பந்தன் மேலும்தெரிவித்துள்ளார்.
1 comment
சம்பந்தர் சொன்னவை:
1.தேர்தலில் வெற்றி பெறக் கூறிய பொய்:
2016 ஆண்டு இறுதிக்குள் அரசியல் தீர்வு வரும்.
2.தேர்தலுக்கு முன் சொன்ன பொய்யை மறைக்க தெரிவித்தது:
நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான நிரந்தரத் தீர்வென்று கிடைக்கும். எம்மக்களுக்கான வெளிச்சம் தென்படத் தொடங்கியிருக்கிறது. அடுத்தமுறை (2017) தீபாவளிக்கிடையில் இவ்வெளிச்சம் நிரந்தரமானதாக அமையும்.
3.புரட்டாதி 2018ல் ஜப்பானிய உயர்ஸ்தானிகரிடம் மறந்து சொன்ன உண்மை:
தற்போதைய ஆட்சிக்காலத்தில் தீர்வுகாணப்பட வேண்டிய அனைத்து விடயங்களுக்கும் தீர்வு எட்டப்படவில்லை என்பதுடன் பொருளாதார ரீதியில் மக்கள் நெருக்கடி நிலைமையை சந்தித்துள்ளனர்.
4.சமீபத்தில் (மார்கழி 2018) வெளியிட்டது:
எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னர் புதிய அரசமைப்புக்கான வரைவு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்று நம்புகிறோம்.