மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் காவல்துறையினர் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணையைத் திசை திருப்ப முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் 90 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது வவுணதீவு பிரதேசத்தில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 19ஆம் திகதி இரவுவேளையில் வீதி சோதனைச் சாவடியில்,; இருந்த காவல்துறையினர் இருவர் துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் கரையக்கந்தீவைச் சேர்ந்த 31 வயதுடைய ஜோச் நிரஞ்சன் என்பவர், இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக தகவல் தெரியும் என புலனாய்வுப்பிரிவினரிடம் தெரிவித்ததுவிட்டு, பின்னர் தெரியாது என விசாரணையைத் திசைதிருப்பியுள்ளார் எனக் குற்றஞ்சாட்டுப்பட்டுள்ளது.
இதனையடுத்தே குறித்த நபரை கைது செய்து தடுப்புக் காவலில் எடுத்து விசாரிக்க தீர்மானிக்கப்பட்டநிலையில் அவரை 90 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இதேவேளை, இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தில் முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுத்துறை உத்தியோகத்தரான அஜந்தன் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவரிடமிருந்து பெறப்பட்ட தகவலுக்கமைய புலிகளின் சாள்ஸ் அன்டனி படைப்பிரிவில் கடமையாற்றிய கிளிநொச்சியைச் சேர்ந்த 48 வயதுடைய இமையன் எனப்படும் வாசலிங்கம் சர்வானந்தன் என்பவரும் கைதுசெய்யப்பட்ட நிலையில் இருவரையும் 90 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது