இலங்கை பிரதான செய்திகள்

சட்டத்திற்கு முரணாக இயங்கிய மணற்குடியிருப்பு மதுபானசாலை மூடப்பட்டது :

 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்பட்ட மணற்குடியிருப்பு மதுபானசாலை நிரந்தரமாக மூடப்படுகின்றது. சட்டத்திற்கு முரணான வகையில் குறித்த மதுபானசாலை இயங்கி வருவதாக, அப்பகுதி மக்கள் மற்றும் மக்கள் சார்பாளர்கள் தொடர்சியான எதிர்ப்பினை வெளியிட்டதைத் தொடர்ந்தே இவ்வாறு மூடப்படுகின்றது.

இது தொடர்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா – ரவிகரன்  கருத்துத் தெரிவிக்கும்போது,
இந்த மதுபானசாலை, 2016.01.24ஆம் திகதியன்று திறக்கப்பட்டது. இந் நிலையில் குறித்த மதுபானசாலை திறக்கப்பட்டமையால், 21வயதிற்கும் குறைந்த இளையவர்கள் மதுப்பழக்கத்திற்கு ஆளாவதாகவும், பொது இடங்களுக்கு அருகாமையில் மதுபானசாலை அமைந்துள்ளதால், பலத்த இடர்பாடுகளுக்கும் தாம் முகங்கொடுப்பதாகவும் அப்பகுதியிலுள்ள பொதுமக்களும், பொது அமைப்புகளும் என்னிடம் தெரியப்படுத்தியிருந்தனர்.

மேலும் இந் நிலைமைகள் தொடர்பாக ஆராயும்போது, மதுபானசாலை அமைக்கப்பட்ட பகுதியில் ஏற்கனவே, பதிவுசெய்யப்பட்ட கோவில்கள், கல்விநிலையங்கள், சிறுவர்பூங்கா போன்ற பொது இடங்கள் இமைந்திருந்தன. எனவே மதுவரிச்சட்டத்தின் 52ஆம் இலக்க எச்.எல் விதிகளை மீறும்வகையலேயே குறித்த மதுபானசாலை அமைந்திருந்தது.

இது தவிர இம் மதுபானசாலை திறக்கப்பட்டதால் சிறுவர்கள் பலரும் மதுவிற்கு அடிமையாகும் அபாயமும் ஏற்பட்டிருந்தது. இது 2006ஆம் ஆண்டின் 27ஆம் இலக்க புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகாரசபைச் சட்டம், 31ஆவதில் 1ஆவது சரத்தின்படி, ஆளொருவருக்கு இருபத்தியொரு வயதிற்கு குறைவான எவருக்கும் மதுப் பொருட்களை விற்றலோ, விற்பனைக்கு மனைதலோ, மேம்படுத்தலோ ஆகாது என்று குறிப்பிடப்பட்டிருப்பதை மீறுவதாக இருந்தது

ஆகவே குறித்த மதுபானசாலை முற்றுமுழுதாக சட்டத்திற்கு முரணானவகையிலேயே இயங்கிக்கொண்டிருந்தது.

உரியவர்களுக்கு இது தொடர்பான விடயங்களைத் தெரியப்படுத்தியதன் விளைவாக, 2016.02.03அன்று இரவு 07.00மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலக ஊழியரால், இம் மதுபானசாலை நிறுத்தப்பட்டதென வீட்டிற்கு வந்து கடிதம் தரப்பட்டது.

இந் நிலையில் 2016.02.05 இரவு தடையை மீறி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்களால் என்னிடம்தெரிவிக்கப்பட்டது.  தொடர்ந்து, மக்கள் மற்றும் பொது அமைப்புகள் ஒன்றிணைந்து இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர்.

இவற்றின் தொடர்ச்சியாக 31.01.2017 இடம்பெற்ற வடமாகாணசபையின் 83ஆவது அமர்வில் இது தொடர்பில் பிரேரணை ஒன்றும் என்னால் முன்மொழியப்பட்டது. இருந்தும் இப்பிரச்சினைக்கு தீர்வுகள் ஏதும் கிடைக்கவில்லை.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த ரவிகரன்  ,

மேலும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கணைப்புக்குழுக் கூட்டம், மற்றும் கரைதுறைப்பற்றுப் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் தொடர்ந்தும் என்னால் அழுத்தங்கள் வழங்கப்பட்டன.

இந் நிலையில் கரைதுறைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டமொன்றில் இவ்விடயம் விவாதிக்கப்பட்டு, பிரதேச செயலரால் இம் மதுபானசாலை தொடர்பில் ஆராய குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. இவ்வாறு அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கைகளின்படி இம்மதுபானசாலை சட்டத்திற்கு முரணாக இயங்குவதாகவே குறிப்பிடப்பட்டது.

அந்தவகையில் 22.10.2018 அன்று இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில், மணற்குடியிருப்பில் சட்டத்திற்கு முராணானவகையில் அமைந்துள்ள இம் மதுபானசாலை அகற்றப்படவேண்டும் என்ற தீர்மானத்தை நான் கொண்டுவந்தநிலையில், மதுவரித் திணைக்களத்தினர் மற்றும் பிரதேசச்செயலர் ஆகியோரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு 2018.10.31ஆம் திகதியுடன் அனுமதியை இரத்துச்செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டது.

குறித்த கூட்டத்தில் மாவட்டச் செயலரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, மாதுபானம் சார்ந்த அனுமதிகள் அனைத்தும் ஆண்டின் சனவரி முதல் திசம்பர் வரையிலேயே வழங்கப்படுவது வழமை எனவே, 2019ஆம் ஆண்டு சனவரி முதல் குறித்த மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாதென தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக கரைதுறைப்பற்று உதவி பிரதேச செயலர் இ.பிரதாபன் அவர்கள் இன்றையதினம் என்னோடு தொடர்புகொண்டு மதுபானசாலை மூடப்பட்டதென்ற செய்தி உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும் சட்டத்திற்கு முரணான வகையில் இயங்கிய மதுபானசாலை அகற்றப்பட்டு, அப்பகுதி மக்களின் இடர்பாடுகளுக்கு தீர்வு ஏற்பட்டுள்ளதையிட்டு மகிழ்வடைகின்றேன் என்றார்.

 

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link