குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மன்னார் இலங்கை போக்குவரத்து சபை சாலை ஊழியர்கள் உட்;பட வட மாகாணத்தில் உள்ள ஏழு சாலைகளின் ஊழியர்கள் இன்று வெள்ளிக்கிழமை (4) காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிர்வாகத்திறமையற்ற வடமாகாண பிராந்திய முகாமையாளரினால் இன்றைய காலத்தில் வடபிராந்திய சாலைகள் இழுத்து மூடப்பட வேண்டிய கட்டாயத்தில் இயங்கி வருகின்றது.
ஏற்கனவே இ.போ.ச சபையினர் ஆகிய எம்மால் எழுத்து மூலம் உயர் பீடங்களுக்கு அறிவித்துள்ள பத்து குற்றச்சாட்டுகளுக்கு உரிய தீர்வு கிடைக்கப்பெறவில்லை.
வட பிராந்திய தொழிலாளர்கள் மிகுந்த அச்சத்துடனும் கவலையுடனும் பணியாற்றி வருவதாகவும் இது வரை பொதுமக்களுக்கு அவர்களின் சேவைகள் பாதிக்கப்படாத வகையில் இரு போராட்டங்களை வட பிராந்திய முகாமையாளருக்கு எதிராக மேற்கொண்டிருந்தோம். ஆனால் இன்று வரை தீர்வுகள் கிடைக்கப்பெறவில்லை.
இதனால் வேறு வழியின்றி வடபிராந்திய தொழிலாளர்கள் தமது நன்மையினை கருதி வட பிராந்திய முகாமையாளரினை வடக்கிலிருந்து வெளியேற்றுமாறு தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை (4) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக இ.போ.ச ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். குறிப்பாக பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள்,அலுவலகத்திற்குச் செல்வோர் உற்பட அனைவரும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.
எனினும் மக்கள் தனியார் போக்குவரத்து சபையின் பேருந்துகள் சேவையினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது