மன்னார், நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள மக்களுக்கு இது வரையில் 400 வீடுகள் வழங்கப்பட்டபோதும், புதிதாக திருமணம் முடித்தவர்கள், நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்கள், முன்னாள் போராளிகள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் என்று நானாட்டான் பிரதேச மக்களின் வீடில்லாக் குறைகளைத் தீர்ப்பதற்கு இன்னும் 800 வீடுகள் தேவைப்படும் எனப் பிரதேசத்தில் திரட்டிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
நானாட்டான் பிரதேசத்தில் சென்ற வருடம் அதிகமாக வீட்டுத்திட்டங்கள் தொடா்பாகவே மக்கள் பிரதிநிதிகளிட மும், அரச அதிகாரிகளிடமும் மக்கள் முறைப்பாடுகள் செய்திருந்ததாக தகவல் கிடைத்ததை அடுத்து, சில கிராமத்து மக்களை நேரடியாக சந்தித்து கருத்துக்கள் கேட்கப்பட்டது.
குறிப்பாக அச்சங்குளம், நறுவிலிக்குளம், கற்கடந்தகுளம், மடுக்கரை, எருவிட்டான் போன்ற கிராமங்கள் உள்ளடங்கலான மக்கள் தெரிவித்ததாவது -போh்க்காலத்திலும் போh் முடிந்த பின்னரும் பல்வேறு நிறுவனங்களினால் வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டிருந்தன. இவை ஒரே அளவான பெறுமதியானவை அல்ல. அத்துடன் முறையான தொழிநுட்ப ஆலோசனைகளுடன் கட்டப்பட்டவையும் அல்ல. அதன்பின் அரசின் அனுசரணையுடன் மீள்குடியேற்ற அமைச்சினால் மூன்று இலட்சம், ஐந்து இலட்சம், ஏழரை இலட் சம் என்று பல்வேறு நிதிபெறுமதிகளில் வீடுகள் வழங்கப்பட்டன.
இவ்வாறான செயற்பாடுகள் மூலம் அரசு தமக்கு பாரபட்சம் காட்டுவதாக மக்கள் சிலா் குற்றம் சுமத்துகின்றனர். ஏற்கனவே சில நிறுவனங்களின் மூலம் வழங்கப்பட்ட வீடுகள் தரம் இல்லாமல் மிக மோசமாக இருப்பதாகவும் மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அத்துடன் அரசினால் வீடுவழங்குவதற்கு மேற்கொள்ளப்படும் புள்ளி இடல் செயற்பாட்டில், மக்கள் அதிருப்தி கொண்டுள்ளனர். ஏனெனில் எல்லாவிதமான சமூக பௌதீக தகவல்கள் அதில் உள்ளடக்கப்படவில்லை. மேம்போக்கான செயற்பாடுகளால் உண்மையான வீட்டுத் தேவை உடையோருக்கு வீடுகள் வழங்கப்படாமல், பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான விடயங்களில் அதிகாரிகள் உரியகவனம் எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
அரசு வீட்டுத்தொகுதிகளை அமைத்துக் கொடுத்து, அரசியல் இலாபம் கருதப்பார்க்கிறது.
வீட்டுத் தேவை உடையவர்களுக்கு அவர்களின் சொந்தக் காணிகளில் வீடுகள் வழங்க வேண்டும் எனவும், பெருவாரியான மக்கள் கேட்டு நிற்கின்றனா்.