அவுஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2:1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில் 72 ஆண்டுகளுக்கு பின்னர் அவுஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெற்றிபெற்றுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய அணி அவுஸ்திரேலிய அணியுடன் மூன்று இருபதுக்கு 20, நான்கு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.
இதில் இருபதுக்கு 20 தொடர் சமநிலையில் நிறைவடைந்தநிலையில் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 31 ஓட்டத்தினாலும், இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி 146 ஓட்டத்தினாலும், மூன்றாவது போட்டியில் இந்திய அணி 137 ஓட்டத்தினாலும் வெற்றி பெற்றிருந்தது.
இந் நிலையில் கடந்த 03 ஆம் திகதி சிட்னியில் ஆரம்பமான நான்காவதும் இறுதியுமான போட்டியில் முதல் இன்னிங்கிசில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 622 ஓட்டங்களை பெற்றதுடன் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. பின்னர் முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி 300 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
இந்த நிலையில் 322 ஓட்டங்கள் என்ற முன்னிலைப் பெற்ற இந்தியா, பலோஒன் வழங்கிய நிலையில் அவுஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸிக்காக விளையாட ஆரம்பித்த நிலையில் விக்கெட் இழப்பின்றி 6 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் இறுதி நாளான இன்று மழை காரணமாக போட்டி கைவிடப்பட்ட நிலையில் நான்காவது போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
இதன்மூலம் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்த இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்று 72 ஆண்டுகளுக்கு பிறகு அவுஸ்திரேலிய மண்ணியில் இந்திய அணி சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.