முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன் மற்றும் எம்.கே. சிவாஜிலிங்கம் மீதான வழக்கு விசாரணை மே மாதம் 27 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 22 ஆம் திகதி முல்லைத்தீவு, வட்டுவாகல் பகுதியில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியினை அபகரிக்க சென்ற நில அளவீட்டாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பில் இவர்களுக்கெதிரான வழக்கு விசாரணை இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையிலேயே இவ்வாறு 27 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் , முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்திற்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அலுவலகம் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட முல்லைத்தீவுக் காவல்துறையினர் து.ரவிகரன் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது