அயோத்தி நில விவகார வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் இருந்து நீதிபதி யு.யு. லலித் விலகியதனையடுத்து விசாரணை ஜனவரி 29-ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது
உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில், சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அஹாரா, ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சரிசமமாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என அலாகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ஆம் ஆண்டு தீர்ப்பளித்திருந்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டநிலையில் இந்த விவகாரத்தை 3 நீதிபதிகள் அமர்வே விசாரிக்கும் என கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒக்டோபர் 29-ம் திகதிக்கு ஒத்தி வைத்த நிலையில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஓய்வு பெற்றுவிட்டார்.
அந்த மேல்முறையீட்டு மனுக்கள், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த ஆண்டு ஒக்டோபர் 29ம் திகதி விசாரணைக்கு வந்தபோது, இந்த மனுக்களைப் புதிதாக அமைக்கப்படும் 5 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இந்தநிலையில் குறித்த வழக்கை விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை உச்ச நீதிமன்றம் இரு தினங்களுக்கு முன்பு நியமித்திருந்த நிலையில் அயோத்தி வழக்கு விசாரணைக்கு வந்த போது முன்னிலையான வழக்கறிஞர் நீதிபதி யு.யு. லலித் அயோத்தி தொடர்பான மற்றொரு வழக்கில் அப்போதைய உ.பி. முதல்வருக்கு ஆதரவாக வாதாடியதை நினைவு கூர்ந்ததையடுத்து இந்த வழக்கை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வில் இருந்து விலகுவதாக நீதிபதி யு.யு.லலித் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து புதிய நீதிபதி நியமிக்கப்பட வேண்டியது இருப்பதால் வழக்கு விசாரணையை ஜனவரி 29-ம் திகதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதிகள் 4 பேரும் தெரிவித்துள்ளனர்.