அமெரிக்காவில் அரச துறைகள் முடக்கம் நீடிப்பதனையடுத்து சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தவிர்த்துள்ளார்.
அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவும் வெளிநாட்டினரை தடுக்க மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட டிரம்ப் 5.7 பில்லியன் டொலர் நிதி ஒதுக்குமாறு அமெரிக்க பாராளுமன்றத்திடம் ஒப்புதல் கேட்டமைக்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஒப்புதல் வழங்காமையினால் வரவுசெலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறவில்லை.
இதனால் கடந்த 20 நாட்களாக அதிகளவான அரச அலுவலகங்கள் செயற்படாமல் முடங்கியுள்ள நிலையில் டிரம்ப் ஏற்பாடு செய்த ஆலோசனை கூட்டத்திலும் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை.
இதனால் தொடர்ந்தும் அரசதுறைகளின் முடக்கம் நீடிக்கும் நிலையில், டாவோஸ் சுற்றுப்பயணத்தை டிரம்ப் ரத்து செய்துள்ளார். உலக பொருளாதார மன்ற மாநாட்டிற்காக டாவோஸ் செல்லும் மிகவும் முக்கியமான பயணத்தை ரத்து செய்திருப்பதாக டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
உலக பொருளாதார மாநாடு சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் வரும் 21-ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது