டிரான் அலஸ் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக தான் விலகுவதாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் கலுஆராச்சி தெரிவித்துள்ளார். ராடா நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டில் டிரான் அலஸ் உள்ளிட்ட 04 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை இதுவரையில் தனது முன்னிலையில் நடைபெற்றதாகவும், எனினும் சாட்சி விசாரணைகளின் போது வெளியாகிய பல விடயங்கள் காரணமாக தனிப்பட்ட ரீதியில் வழக்கு விசாரணையிலிருந்து விலகுவதாகவும் மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் கலுஆராச்சி நேற்று (11.01.19) அறிவித்துள்ளார். இந்த வழக்கு விசாரணையை கொழும்பு, இலக்கம் – 05 மேல்நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சியின் முன்னிலையில் முன்னெடுக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 29 ஆம் திகதி வழக்கு விசாரணை நடத்தப்படும் என மேல்நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி அறிவித்துள்ளார்.
மகிந்த ஆட்சிக்காலத்தில் விடுதலைப்புலிகளுகளுடன் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல்களில் ராடா நிறுவனமும் டிரான் அலசும் தொடர்புபட்டிருந்தார்கள் என குற்றம்சாட்டப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.