தனது குடும்பத்தினரிடம் இருந்து தப்பி சென்று பாங்கொக் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட சவூதி அரேபிய பெண்ணான 18 வயதான ரஹாப் மொஹம்மத் அல்-குனனுக்கு கனடா தஞ்சமளித்துள்ளது. கடந்த வாரயிறுதியில், தாய்லாந்தின் பாங்கொக்கை சென்றடைந்த றஹாப் தனது குடும்பத்தினரால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுகிறது எனத் தெரிவித்து அவுஸ்திரேலியாவுக்குச் சென்று, அங்கு அகதி அந்தஸ்துக் கோரத் திட்டமிட்ட போது தாய்லாந்து அதிகாரிகளால் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், றஹாபின் அகதி அந்தஸ்துக் கோரிக்கையை ஏற்க வேண்டுமென்ற அழுத்தங்கள் அவுஸ்திரேலியாவுக்கு வழங்கப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு கனடா தஞ்சமளித்துள்ளது.
உலக அளவில் மனித உரிமைகள் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காக நிலைப்பாடு எடுப்பதில் கனடா உறுதியாக உள்ளது எனவும் அந்தவகையில் ரஹாப் மொஹம்மத் அல்-குனனுக்கு அகதிகள் அந்தஸ்து வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு தங்களிடம் கேட்டுக்கொண்டதற்கமைய தாங்கள் அதனை ஏற்றுக்கொண்டுள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
குவைத்துக்குச் சென்றிருந்த போது, தனது குடும்பத்திடமிருந்து தப்பியோடிய இப்பெண் தனது குடும்பத்திடமிருந்து உடல், உள சித்திரவதைகளை எதிர்நோக்குவதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.