குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சியில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டு ஒரு வாரத்திற்கு பின்னர் ஒன்பது பாரவூர்திகளில் நிவாரண பனர்கள் கட்டியவாறு கொண்டுவரப்பட்ட பொருட்கள் கிளிநொச்சி சதொச விற்பனை நிலையத்தில் இறக்கப்பட்டமை தொடர்பில் பொது மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சுமார் ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான அரிசி,மா, சீனீ, பருப்பு, கடலை, சோயா, ரின்மீன், பிஸ்கட், தண்ணீர் போத்தல்கள், வெங்காயம் போன்ற பொருட்களே இவ்வாறு இறக்கியதாக பொருட்களை இறக்கி ஏற்றும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். அத்தோடு இறக்கப்பட்ட பொருட்களில் அரிசி, மா, சீனி, பருப்பு, கடலை, சோயா ஆகிய பொருட்கள் பொதி செய்யப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் கிளிநொச்சி சதொச விற்பனை நிலையத்தின் முனாமையாளரை தொடர்பு கொண்டு வினவிய போது குறித்த பொருட்கள் தமது சதொச தலைமையகத்திலிருந்து நிவாரணத்திற்காக கொண்டு வரப்பட்டது எனவும் அதனை பொதி செய்து மக்களுக்கு வழங்குவதற்காக மாவட்டச் செயலகத்திடம் கையளிப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு ஏனைய ரின் மீன், பிஸ்கட்,தண்ணீர் போத்தல் போன்ற பொருட்களை மீண்டும் தலைமையத்திற்கு திருப்பி அனுப்பிவிடுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரிடம் கடந்த வாரம் ஊடகவியலாளர் சிலர் வினவிய போது தனக்கு அது தொடர்பில் தெரியாது எனவும், ஆனால் பருப்பு ஏனைய இடங்களை விட சதொசவில் விலை குறைவு என்பதனால் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் கூட்டுறவுச் சங்கங்கள் பருப்பை மாத்திரம் சதொசவில் கொள்வனவு செய்து வழங்குமாறு கூறியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சதொச விற்பனை நிலையத்திற்கு வெள்ள நிவாரண பனர்களுடன் வந்த பொருட்கள் தொடர்பில் பொது மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என மக்கள் கோருகின்றனர்.