இலங்கையின் புதிய இராணுவ பிரதானி சவேந்திரசில்வாவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகள் யுத்த குற்றங்கள் குறித்து தீவிர சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ளவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதனை தடுப்பதற்கான , யுத்தத்திpன் பின்னரான பாதுகாப்பு துறை சீர்திருத்தங்களின் போது படையினர் குறித்து விசாரணைகளை மேற்கொள்வது மிகமுக்கியம் எனவும் சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
2009 உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களின் போது 58வது படைப்பிரிவின் தளபதி என்ற அடிப்படையில் சவேந்திர சில்வா மனித உரிமை சட்டமீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள படையணியின் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக காணப்பட்டார் எனவும் சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது
மேலும் மனித உரிமை மீறல்கள் மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்த தனது வாக்குறுதிகளை இலங்கை மெதுவாகவே நிறைவேற்றி வரும் தருணத்தில் இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது எனவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீடு குறித்த விடயங்களில் அரசாங்கம் சிறிதளவு முன்னேற்றத்தை எட்டியிருந்தாலும் யுத்த குற்றங்களை விசாரணை தொடர்பில் போதுமான ஆதாரங்கள் காணப்பட்டால் சந்தேகநபர்களை விசாரணைக்கு உட்படுத்துவது குறித்து அரசாங்கம் வலுவான நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.