தமிழ் மக்களின் அழிவுக்கும் பிரச்சினைகளுக்கும் பிரதாமான காரணமாக இருப்பது ஒற்றுமையின்மையே என்றும் தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் குற்றம் என்றும் வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் சுரேன் இராகவன் தெரிவித்தார். வீரகேசரிப் பத்திரிகைக்கு வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் வழங்கிய செவ்வியை நன்றியுடன் குளோபல் தமிழ் செய்திகள் இங்கு பிரசுரிக்கின்றது. -ஆசிரியர்
கேள்வி:- பல்வேறு தரப்பினரிடத்திலிருந்தும் வடமாகாண ஆளுநர் பதவிக்கான பரிந்துரைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சென்றுகொண்டிருந்த நிலையில் தாங்கள் அப்பதவிக்கு எவ்வாறு நியமிக்கப்பட்டீர்கள்?
பதில்:- நான் இலங்கை தமிழன் என்பதால் அகதிவாழ்க்கை எனக்கு புதிதல்ல. நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்த நான் உயர்கல்வியை நிறைவு செய்த பின்னர் பட்டப்படிப்புக்களையும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நிறைவு செய்திருந்தேன். எனினும், இலங்கை குறித்த எனது கரிசனைகள் ஒருபோதும் குறைவடைந்திருக்கவில்லை. நாட்டுக்கு என்னாலான பங்களிப்புக்களை தொடர்ச்சியாக நல்கிவந்திருந்தேன்.
அவ்வாறான நிலையில் தான் 2015ஆம் ஆண்டு ஜனவரி எட்டில் அமைதியான ஆட்சி மாற்றம் நடைபெற்றிருந்தது. அத்தகைய ஆட்சிமாற்றமொன்று நிகழவில்லையாயின் இலங்கை மிகமோசமான சர்வாதிகார ஆட்சிப்பிடிக்குள் சென்றிருக்கும். ஆட்சியாளர்கள் யார் என்பதை விடவும் ஆட்சி முறைமையானது மோசமாக இருந்ததால் அந்த மாற்றம் தேவைப்பட்டிருந்தது.
அடிப்படை ஜனநாயகத்தினை விரும்பிய என்னைப்போன்ற புத்திஜீவிகள் இணைந்து மேற்கொண்ட அதற்கான முயற்சிகளை எடுத்தபோது அச்செயற்பாடுகளில் நானும் பங்கேற்றிருந்தேன். அந்த ஆட்சிமாற்றம் நிகழ்ந்த பின்னர் புத்திஜீவிகள் தரப்புடன் இணைந்து எனது செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வந்துகொண்டிருந்த காலப்பகுதியில் தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்னைச் சந்திருந்த தருணத்தில் வடக்கு ஆளுநர் பதவியை பொறுப்பெடுக்க முடியுமா? என்று கேட்டிருந்தார்.
அச்சமயத்தில் நான் அரசியல்வாதியல்ல என்று பதிலளித்தேன். அதன்போது ஜனாதிபதி இலங்கையில் இருக்கக்கூடிய மாகாணங்களில் வடமாகாணமானது புத்திஜீவிகளைக் கொண்ட மாகாணமாகும். தற்போதைய நிலையில் அம்மாகாணத்தின் நிலைமகளை உணர்ந்து அம்மாகாணத்திற்கான ஒரு திசையை ஏற்படுத்தும் கருவியாக தாங்கள் செயற்பட வேண்டும் என்று கோரினார். அதனையடுத்து நான் ஆளுநர் பதவியை ஏற்றுக்கொள்வதற்கு இணங்கியிருந்தேன்.
கேள்வி:- வடக்கில் எவ்வாறான மாற்றங்களை உடனடியாக ஏற்படுத்துவதற்கு திட்டமிட்டிருக்கின்றீர்கள்?
பதில்:- நான் பதவியேற்று ஐந்து நாட்களே ஆகின்றன. எனது பணிகளை முன்னெடுப்பதற்கு வடமாகாண நிருவாக உத்தியோகத்தர்கள் உதவியாக இருக்கின்றார்கள். வடமாகாணத்தினைப் பொறுத்தவரையில் மொழியை அடிப்படையாகக் கொண்ட கலாசாரத்தினைக் கொண்டிருக்கிறது. நாம் தமிழர்கள் என்று கூறும்போது அதில் எமக்கு உரிமையும் பெருமையும் இருக்கின்றது. போர் நிறைவுக்கு வந்து பத்தாண்டுகளாகின்றபோதும் கூட பெயர்ப்பலகைகள் சரியாக எழுதப்படவில்லை. தமிழ்மொழியிலும் தவறுகள் உள்ளன. ஆகவே அடுத்த மூன்று மாதங்களுக்குள் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு அவசியமான அனைத்திலும் மும்மொழியினை அமுலாக்க வேண்டும் என்று கோரியுள்ளேன்.
அரச நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் மற்றும் ஆவணங்கள் எல்லாம் அவ்வாறு அமைய வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகவுள்ளது. அதற்காக கொழும்பு யாழ். பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த விரிவுரையாளர்களை உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும் அண்மையில் கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளம் ஏற்பட்டிருந்தது. இதனுடன் இரணைமடு குளம் தொடர்புபடுத்தப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்து ஆராய்வதற்காக குழுவொன்றை நியமித்துள்ளேன். அக்குழு எதிர்வரும் 21 தினங்களில் அறிக்கையை எனக்கு கையளிக்க வேண்டும் என்று பணிப்புரை விடுத்திருக்கின்றேன். இவ்வாறு அவசிய தேவைகளை மையப்படுத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தயாராகவே உள்ளேன்.
கேள்வி:- தற்போதைய நிலையில் வடக்கு மாகாணத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட சபையொன்று இல்லாத நிலையில் வினைத்திறனான நிருவாகத்தினை முன்னெடுப்பதற்கு என்ன செய்யவுள்ளீர்கள்?
பதில்:- முதலமைச்சர் அமைச்சர்கள் இல்லாதுவிட்டாலும் மாகாண நிருவாகத்தினை மேற்கொள்வதற்கான கட்டமைப்பு அவ்வாறு தான் உள்ளது. தேவையான உத்தியோகத்தர்கள் உள்ளார்கள். ஆகவே அந்த உத்தியோகத்தர்களுக்கு வழிகாட்டக்கூடிய நல்ல தலைமைத்துவம் தான் தேவையாக இருக்கின்றது. அதனை வழங்க முடியும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.
ஜனநாயக ரீதியில் விவாதித்து தீர்மானங்களை எடுப்பது சிறந்ததாக இருந்தாலும் கடந்த காலத்தில் அரசியல் ரீதியாக காணப்பட்ட பிளவுகளும் பிரச்சினைகளும் தான் வடமாகாண சபையை வினைத்திறனாக முன்னெடுக்க முடியாது போனமைக்கான காரணமாக இருக்கின்றது. தற்போதைய நிலையில் அரசியல்ரீதியாக தெரிவுசெய்யப்பட்ட சபை இல்லாத நிலையில் வடக்கு புத்திஜீவிகளையும் இணைத்துக்கொண்டு எமது உத்தியோகத்தர்களின் உதவியுடன் வடக்கின் தேவைகளுக்கான நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்க முடியும் என்ற கருதுகின்றேன்.
கேள்வி:- 2007இல் பதில் ஆளுநராக பதவியேற்ற மொஹான் விஜேவிக்கிரம முதல் ரெஜினோல்ட் குரே வரையில் வடக்கின் ஆளுநராக இருந்தவர்கள் மத்திய அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலையே முன்னெடுத்தவர்கள் என்ற பொதுப்படையான சிந்;தனை மக்கள் மத்தியில் இருக்கின்ற நிலையில் அந்தமக்களின் மனதை வெல்வது உங்களுக்கு சவாலாகின்றதல்லவா?
பதில்:- நீங்கள் குறிப்பிட்ட விடயம் உண்மையிலேயே சவாலாகவே உள்ளது. ஆளுநர் ஜனாதிபதியால் நேரடியாக தெரிவு செய்யப்படுகின்றார். அரச தலைவரின் கொள்கை திட்டங்களுடன் ஓரளவாவது இணங்கிச் செல்பவரே அவ்வாறு தெரிவு செய்யப்படுகின்றார் என்பது யதார்த்தம். இருப்பினும் தெரிவு செய்யப்படுபவரின் செயற்பாடுகள் அரசியல் தலைமை கொள்கை போன்றவற்றின் அடிப்படையில் அல்லாது மக்களினை மையமாகக் கொண்டதாக அமைய வேண்டும்.
அரசியலமைப்பு மாற்றம் என்பது ஒரு நீண்ட பயணமாகின்றது. அதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் தற்போது அழிந்த நிலையில் இருக்கின்றார்கள். நீண்ட பயணம் நிறைவடைகின்ற வரையில் அவர்கள் பாதுகாப்பாக வாழவேண்டும். அவர்களின் கனவுகள் நனவாக வேண்டும். ஆகவே வாழ்வாதாரம், வாழும் மற்றும் அரசியல் உரிமைகள் ஆகிய இரண்டு விடயங்களும் ஒரேநதியின் இரு கரைகளாக கொண்டு செல்ல வேண்டும் என்பதே எனது விருப்பம்.
கேள்வி:- வடக்கு மாகாணத்தில் ஆளுநருடன் அதிகாரம் சம்பந்தமான பிரச்சினைகள் அதிகமாக காணப்பட்டிருந்த நிலையில் நீங்கள் அத்தகைய நிலைமைகளை எவ்வாறு கையாளப்போகின்றீர்கள்?
பதில்:- அரசியலமைப்பின் பிரகாரம் அதிகார எல்லைகள் தெளிவாக கூறப்பட்டுள்ளன அவ்வாறான நிலையில் ஆளுநரோர, முதல்வரே தமக்கு தேவையான வகையில் அதனை பயன்படுத்துவது துஷ்பிரயோகமாகும். தற்போது தெரிவு செய்யப்பட்ட சபையொன்று இல்லாத நிலையில் முதலமைச்சர் அமைச்சரவை ஆகியவற்றின் பொறுப்புக்களும் என்தோளில் சுமக்க வேண்டியுள்ளது. ஆகவே, பொறுமையாக செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமே தவிர பிறிதொரு தரப்பினை வீழ்த்துவதற்கான சந்தர்ப்பமாக நான் கருதவில்லை. மக்களுக்கு சேவை செய்வதற்கு ஆழப்பெரும் வாய்ப்பும் பொறுப்புமாகும்.
கேள்வி:- வடக்கில் உள்ள அரசியல் தரப்பினரிடையே காணப்படும் பிளவுகள் தங்களின் செயற்பாடுகளுக்கு தடையாக இருக்குமென்று கருதுகின்றீர்களா?
பதில்;:- தமிழ் மக்களின் அழிவுக்கும் பிரச்சினைகளுக்கும் பிரதாமான காரணமாக இருப்பது ஒற்றுமையின்மை. கடலில் எவ்வளவு மண்ணிருக்குமோ அந்தளவுக்கு தமிழர்கள் பிரிந்திருக்கின்றார்கள் என்பது தான் எனது ஊகம். ஆனால், நெருக்கடிகள், பிரச்சினைகள் வருகின்றபோது ஒட்டுமொத்த சமூகமுமே முகங்கொடுக்க வேண்டி ஏற்படுகின்றது. மக்களின் அடிப்படை விடயங்களை மையப்படுத்தி செயற்பாடுகளை முன்னெடுக்கின்றபோது அரசியல் தலைமைகள் கட்சிகள் ஒற்றுமையாக ஒன்றிணைவார்கள் என்று கருதுகின்றேன். அவ்வாறான விடங்களில் கூட ஒற்றுமையாக வராது போவார்களாயின் அது தமிழ்மக்களுக்கு எதிராக செய்யும் மிகப்பெரும் குற்றமாகவே பார்க்க வேண்டி ஏற்படும்.
கேள்வி:- வடக்கு அரசியல் தரப்புக்களுடன் சந்திப்புக்களை நடத்தியுள்ளீர்களா?
பதில்:- தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், அங்கஜன் இராமநாதன் உள்ளிட்டவர்களுடன் சந்திப்புக்களை நடத்தியுள்ளேன். எதிர்காலத்தில் ஏனைய அரசியல் தலைவர்களான, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரெஷ்பிரேமச்சந்திரன் உள்ளிட்டவர்களையும் சந்திக்க தயாராகவே உள்ளேன். நான் அரசியல்வாதியுமில்லை. எனக்கு அரசியல் கனவும் இல்லை. ஆகவே எனது பயணத்தில் எவ்விதமான குறுக்கீடுகளும் ஏற்படாது என்ற நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றேன்.
கேள்வி:- சம்பந்தன் விக்கினேஸ்வரன் ஆகியோருடனான சந்திப்புக்கள் எவ்வாறு அமைந்திருந்தன?
பதில்:- இலங்கையின் மூத்த அரசியல் வாதியான சம்பந்தன் எனக்கு ஆசீர்வதித்தது வடக்கு மக்களுக்கான பணியை முன்னெடுப்பதற்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றியாகும். விக்கினேஸ்வரனுடன் இருபது நிமிட சந்திப்பு இரண்டு மணிநேரம் வரையில் நடைபெற்றது. அவருடனான கலந்துரையாடலில் தமிழ் மக்களின் உணர்வு ரீதியான விடயங்களை முன்வைத்திருந்தார். பிரிவினைவாதத்திற்கு இடமிருக்கின்றதா? பிரிந்து போவது அவசியம் தானா? என்பதுள்ள சமகால அரசியல் போக்குகள் பற்றியெல்லாம் கலந்துரையாடி நண்பர்களாகியே விடைபெற்றிருந்தேன். இருதலைவர்களும் வேறுபட்டிருப்பது துரதிஷ்டவசமாகும். இருப்பினும் இரு தலைவர்களும் தங்களது வழியில் தமிழ் மக்களுக்காக உழைப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
கேள்வி:- இராணுவ வெளியேற்றம் காணாமல்போனவர்கள் சம்பந்தமாக சகல தரப்புக்களும் அழுத்தமளித்து வருகின்ற நிலையில் அதுகுறித்து உங்களுடைய நிலைப்பாடு என்ன?
பதில்;:- இராணுவம் 96சதவீதமான காணிகளை மக்களிடத்தில் வழங்கி விட்டார்கள். இலங்கை ஒரு போர் நடந்த நாடு என்ற வகையில் எஞ்சியுள்ள காணிகளில் தேசிய பாதுகாப்புக்கு குந்தகமின்றி விடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். போர் நடந்த நாடொன்றில் இருக்கும் இராணுவம் சாதாரணமாக இருக்க முடியாது. எனினும் போரின் பின்னராக குறிப்பாக கடந்த மூன்று வருடங்களிலே கெடுபிடிகளின்றியே இராணுவம் இருக்கின்றது.
நான் இராணுவத்திற்கு வெள்ளைபூச வரவில்லை. இருப்பினும் கிளிநொச்சி வெள்ள அனர்த்தத்தின்போது இராணுவம் செய்த மனிதாபிமான பணிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
அந்த வகையில் இராணுவம் மனிதாபிமான ரீதியில் முன்னேறியுள்ளதோடு முகாமிற்குள்ளேயே இருக்கின்றது அடுத்ததாக காணாமல்போனவர்கள் குறித்து சர்வதேச விசாரணையொன்று வலியுறுத்தப்படுகின்றது. தமது காணாமல்போன உறவுகள் தொடர்பில் நீதி நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும். ஆனால் அதற்கு காலம் எடுக்கும். போர் நிறைவடைந்து பத்து வருடங்களாகின்ற நிலையில் அந்த விடயங்கள் சம்பந்தமாக எனது அதிகாரத்திற்கு உட்பட்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பேன்.
கேள்வி:- வடக்கு மக்களின் கோரிக்கைகளின் நியாயத்தினை தெற்கிற்கு தெளிவுபடுத்துவதற்கு கிடைத்திருக்கும் இச்சந்தர்ப்பத்தினை எப்படி பயன்படுத்தப்போகின்றீர்கள்?
பதில்:- வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் கட்டப்படும் பாலத்தின் அடிக்கல்லாக இருக்கவே விரும்புகின்றேன். தமிழ் மக்களின் அடிப்படையான பிரச்சினைகளை தெற்கிலுள்ள மக்களுக்கு தெரியப்படுத்தி புரிதல்களை ஏற்படுத்த வேண்டும். முதற்கட்டமாக தெற்கு ஊடகவியலாளர்களை வடக்கிற்கு அழைத்து அவர்களாகவே தமிழ் மக்களின் பிரச்சினைகளை கண்டறிவதற்கு வசதிகளை மேற்கொள்வதுடன் வடக்கு தெற்கு புத்திஜீவிகள் கலைஞர்களை ஒன்றிணைத்து செயற்றிட்டமொன்றினை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளேன்.
கேள்வி:- வடக்கில் வாழ்வாதாரம் வேலைவாய்ப்பு உள்ளிட்ட தீர்க்கப்படக்கூடிய விடயங்கள் தொடர்பில் எத்தகைய நடவடிக்கைகளை முன்னடுப்பதற்கு திட்டமிட்டுள்ளீர்கள்?
பதில்:- வேலைவாய்ப்பின்மையால் இளையோர் சமுதாயம் குழுக்களாக செயற்படுதல் போதைப்பொருட்களுக்கு அடிமையாதல் போன்ற நிலைமைகள் காணப்படுகின்றன. அவற்றை மாற்றுவதற்காகவும் முதலீடுகளை ஏற்படுத்துவதற்காகவும் யாழில் பொருளாதார மையம் என்ற கட்டமைப்பினை உருவாக்கி அதனூடாக செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளோம்.
கேள்வி:- வடக்கு அபிவிருத்திக்கு புலம்பெயர்ந்தவர்கள் பங்களிப்பதற்கு தயாராக இருக்கின்றபோதும் முதலீடுகளை செய்வதற்கு மத்திய அரசாங்கம் முட்டுக்கட்டையாக இருக்கின்றது என்ற குற்றச்சாட்டு கடந்தகாலங்களில் நிலவியிருந்த நிலையில் உங்கள் காலத்தின் போது அதற்கான வழியொன்று ஏற்படுத்தப்படுமா?
பதில்:- வடக்கு மக்களை மையப்படுத்திய நூற்றுக்கணக்கான செயற்றிட்டங்கள் எம்மிடத்தில் உள்ளன. வர்த்தக மற்றும் சேவைத்துறை சார்ந்து அவை காணப்படுகின்றன. முதலீடுகளை மேற்கொள்வதற்கு தயாராக இருக்கின்ற புலம்பெயர்ந்தவர்கள் என்னுடன் நேரடியாகவே கலந்துரையாடல்களை மேற்கொள்ள முடியும். உண்மையான, நேர்மையானவர்களுக்கு சந்தர்ப்பங்களை வழங்குவதற்கு தயாராகவே உள்ளேன்.
கேள்வி:- 2015இல் மாற்றத்திற்காக செயற்பட்ட உங்களை வடக்கு ஆளுநராக நியமித்து கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி தான் எடுத்த தீர்மானத்தினால் அதிருப்தி அடைந்த தமிழ் மக்களின் மனநிலையில் மாற்றத்தினை ஏற்படுத்த ஜனாதிபதி மைத்திரி முன்னெடுத்த முயற்சியாக உங்களின் நியமனத்தினை பார்க்க முடியுமா?
பதில்;:- தமிழ் மக்களுக்கு அதிருப்தி உள்ளமை உண்மையாக இருக்கலாம். போர் நிறைவடைந்து பத்துவருடங்களாகின்றபோதும் அந்த மக்களின் நிலைமைகள் முழுமையான முன்னேற்றத்தினை காணவில்லை. அவர்களுக்கு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் செய்வதற்கு பதிலாக என்னை நியமிப்பது என்றால் நான் விஷ்வருமனாக இருக்க வேண்டும். என்னைப்பொறுத்தவரையில் அரசுக்கும் வடக்கு மக்களுக்கும் இடையிலான தொடர்பினை ஏற்படுத்தும் பணியை செவ்வனே செய்வதையே இலக்காகக் கொண்டிருக்கின்றேன்.
2 comments
மக்களின் அடிப்படை விடயங்கள் தொடர்பான பரிந்துரைகள்:
குறைந்தபட்சம் கீழே தரப்பட்டுள்ள அடிப்படைத் தேவைகள் தொடர்பான முக்கிய பணிகளை வடமாகாண ஆளுநர் ஒரு வருடத்தில் பூர்த்தி செய்விக்க வேண்டும்.
1. வசிக்க மற்றும் பயிரிட, விடுவிக்க வேண்டிய தனியார் நிலம்.
2. உயிருடன் இருக்கத் தேவையான பாதுகாப்பு.
3. சுவாசிக்கக்கூடிய மாசு அற்ற காற்று.
4. குடிக்கக்கூடிய சுத்தமான தண்நீர்.
5. சாப்பிடத் தேவையான சத்துணவு.
6. உடுக்கக் குறைந்தபட்ச உடுப்பு.
7. வசிக்க அடிப்படை வீடு.
8. உடல் நலம் பேண மருந்து.
9. வாழ, நிதி கொடுக்கும் வேலை.
10. கலை, கலாசாரம் மற்றும் பண்பாடு உள்ளடங்கிய வாழ்க்கை முறை.
11. தினசரி வாழ்க்கையை நின்மதியாக நடத்தக்கூடிய தொடர்ச்சியான சூழ்நிலை.
ஆளுநரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் தமிழர் சார்பான, அடிப்படைத் தேவைகள் தொடர்பான பணிகளைத் தீர்மானித்து, பணிகள் (Task) தொடங்கும் தேதி மற்றும் பணிகள் நிறைவு செய்யும் தேதி அடங்கிய ஒரு திட்ட அட்டவணை (Project schedule) உருவாக்கப்பட வேண்டும்.
ஆளுநர் தனது அதிகாரத்தையும் வளங்களையும் பயன்படுத்தி திட்ட அட்டவணையை செயல்படுத்த வேண்டும் என்று பாதிக்கப்பட்ட தமிழர்கள் விரும்புகிறார்கள்.
“தமிழ் மக்களின் அழிவுக்கும் பிரச்சினைகளுக்கும் பிரதாமான காரணமாக இருப்பது ஒற்றுமையின்மை. நெருக்கடிகள், பிரச்சினைகள் வருகின்றபோது ஒட்டுமொத்த சமூகமுமே முகங்கொடுக்க வேண்டி ஏற்படுகின்றது”.
மக்களின் அடிப்படை விடயங்களை மையப்படுத்தி செயற்பாடுகளை முன்னெடுக்கின்றபோது சம்பந்தர், விக்னேஸ்வரன், வரதராஜப் பெருமாள், ஆனந்த சங்கரி, டக்லஸ், சேனாதி, சுமந்திரன் சர்வேஸ்வரன், கஜன், செல்வம், சித்தார்த்தர், சுரேஷ், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், புலம்பெயர் அமைப்புக்கள், தொண்டர்கள், நிபுணர்கள் மற்றும் முகாமைத்துவம் தெரிந்த தமிழ் உணர்வுள்ள தமிழர்களை அழைத்து ஒற்றுமையாக ஒன்றிணைய ஆளுநர் முயற்சிகளை எடுக்க வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும். உதவ முடியுமா?