வரலாற்றில் முதல் முறையாக நிலவில் ஒரு தாவரம் முளைத்துள்ளது. சீனாவின் சாங் இ4 ரோபோட்டிக் ஆய்வு விண்கலம் மூலம் நிலவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட விதைகளே இவ’;வாறு முளைத்துள்ளன என சீனாவின் தேசிய விண்வெளி அமைப்பு தெரிவித்துள்ளது.
விண்வெளி ஆராய்ச்சியில் நீண்டகால நோக்கில் குறிப்பிடத்தக்க ஒரு முன்னேற்றமாக இது கருதப்படுகிறது. நிலவில் தாவரங்களை வளர்க்கும் திறன் இருப்பது, நீண்டகால விண்வெளித் திட்டங்களுடன் ஒருங்கிணைந்த செயல்பாட்டுக்கு உதவும் எனவும் செவ்வாய் கிரகப் பயணம் போன்ற, விண்வெளித் திட்டத்துடன் இணைந்ததாக இது இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் விண்வெளி வீரர்கள் உணவுத் தேவைக்காக பூமிக்கு திரும்பி வருவதற்கான தேவை இல்லாமல், விண்வெளியிலேயே தங்களுக்கான உணவை அறுவடை செய்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலவில் தரையிறங்கியுள்ள சீனாவின் விண்கலத்தில் பருத்தி, உருளைக்கிழங்கு விதைகள், ஈஸ்ட் மற்றும் பழ ஈக்களின் முட்டைகள் ஆகியவை கொண்ட மண்ணும் வைக்கப்பட்டுள்ளது.
விண்கலத்தில் சீலிடப்பட்டுள்ள கொள்கலனில் தாவரங்கள் வைக்கப் பட்டுள்ளன. இந்தப் பயிர்கள் ஒரு சிறிய உயிரி மண்டலத்தை – ஒரு செயற்கையான, தற்சார்பு சூழலை உருவாக்குவதாக இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது