“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அல்லது மகிந்த ராஐபக்ஸ தலைமையிலான அணியினருக்கு பகிரங்கமாக ஒரு அழைப்பு விட விரும்புகின்றேன். அதாவது புதிய அரசியலமைப்பு உருவாகுவதை தயவு செய்து தடுக்க வேண்டாம்” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஐபக்ஸ உருவாக்கிய சர்வகட்சி குழுவின் சிபார்சின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட நிரல்களை ஏற்றுக்கொள்வதற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தயார். புதிய அரசியலமைப்பை உருவாக்கும்போது மஹிந்த ராஜபக்சவின் பங்களிப்பும் அதிகமாக இருக்க வேண்டுமென அழைப்பு விடுத்துள்ள சுமந்திரன் மத்தி, மாகாண நிரல் தொடர்பான அவரது பரிந்துரையை சமர்ப்பிக்கும்படி கேட்டுள்ளார்.
நேற்று பருத்தித்துறையில் நடந்த பாராட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர்,
“பொங்கல் தின வாழ்த்துச் செய்தியிலே முன்னாள் ஐனாதிபதி மகிந்த ராஐபக்ஸ தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வொன்று கிடைக்க வேண்டுமென தான் பிரார்த்திப்பதாகச் சொல்லியிருக்கின்றார். அதனை நாங்கள் வரவேற்கிறோம். தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு தேவை என்பதை அவர் வெளிப்படையாகச் சொன்னதை நாங்கள் வரவேற்கிறோம். அத்துடன் இப்போது பிறந்திருக்கின்ற தை மாதத்திலே வர வேண்டுமென அவர் பிரார்த்திப்பதாகச் சொல்லியதற்கு நாங்கள் நன்றிகளையும் தெரிவித்தக் கொள்கிறோம். ஆகவே அதனைச் செய்கிற வழியில் எங்களோடு சேர்ந்து வர வேண்டுமென்றும் அவரிடம் நாங்கள் ஒரு கோரிக்கையையும் விடுக்கின்றோம்.
இந்த வரைபைப் பாருங்கள் இந்த வரைபிலே நாட்டைப் பிரிப்பதற்கான எந்தவித யோசனையும் கிடையாது. முற்று முழுதாக பிளவுபடமுடியாத நாடு என்பதற்கு அப்பாலும் சென்று பிரிக்கப்பட முடியாத நாடு என்ற சொல் சேர்க்கப்பட்டிருக்கின்றது. ஆனால் அதிகாரங்கள் முழுமையாகப் பிரிக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. அதைத் தான் நாங்கள் கேட்கின்றோம்.
ஆளுகின்ற அதிகாரங்கள் எங்களுடைய கைக்கு வர வேண்டும். ஒரே நாடாக இருப்பதில் எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் கிடையாது. ஆனால் அதிகாரங்கள் பிரிக்கப்பட வேண்டும். அப்பிடியான ஒரு நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கிற பொழுது எங்களோடு சேர்ந்து வர வேண்டுமென்ற அன்பான அழைப்பையும் அவருக்கு விடுக்கிறோம்”
“இந்த வரைபிலே இல்லாத சில பகுதிகள் இருக்கின்றன. இந்த வரைபு முழுமையானது அல்ல. இன்னும் சில பகுதிகள் இருக்கின்றன. இதில் மிகவும் விசேடமாக மத்திக்கு இருக்கின்ற நிரல் என்ன? மாகாணத்துக்கு கொடுக்கப்பட்டிருக்கிற நிரல் என்ன? என்ற நிரல் இதிலே கிடையாது. தேசிய நிரல் மாகாண நிரல் அல்லது பொது நிரல் என இதிலே இல்லை. அந்த நிரல்களை நாங்கள் தீர்மானிக்கிற பொழுது முன்னாள் ஐனாதிபதி மகிந்த ராஐபக்ஸ காலத்திலே அவர் உருவாக்கிய சர்வகட்சி பிரதிநிதித்துவக் குழுவினுடைய சிபார்சின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட நிரல்களை ஏற்றுக் கொள்வதற்கு நாங்கள் தயார். நிரல்கள் சம்மந்தமாக நீங்கள் வைத்திருக்கும் முன்மொழிவை ஏற்றுக் கொள்ள நாங்கள் தயார் என பகிரங்கமாக நான் சொல்லுகிறேன்.”
இந்த அரசமைப்பு உருவாக்கத்திலே உங்களுடைய பங்களிப்பும் பிரதானமாக அங்கே இருக்கும். உங்களுடைய காலத்திலே உருவாக்கப்பட்ட அந்த நிரலை நாங்கள் ஏற்கத் தயார் என்று சொல்லுகிறேன். ஏனென்றால் உங்களுடைய பங்களிப்பும் இந்த அரசியலமைப்பில் முழுமையாக இருக்க வேண்டும். வேறு விடயங்கள் தொடர்பிலும் நாங்கள் பேசத் தயார். நிறைவான ஒரு சமாதானத்தை இந்த நாட்டுக்குள் நாங்கள் விரும்புகின்றோம். திரும்பவும் இரத்தக்களறி ஏற்படக் கூடாதென நாங்கள் விரும்புகின்றோம். சரியான முறையிலே அரசியலமைப்பின் அடிப்படையிலே இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண வேண்டுமென உண்மையாகவே விரும்புகின்றோம்.
எங்கள் மக்கள் எங்களுக்கு அந்த ஆணையைக் கொடுத்திருக்கிறார்கள். அதனடிப்படையிலே நாங்கள் உங்களிடத்திலே பகிரங்கமாகக் கேட்கின்றோம். உங்களுக்கும் நாட்டிலே பெருமளவு ஆதரவு இருக்கிறது. அதனை ஏற்றுக் கொள்கிறோம். அந்த ஆதரவை கொண்டு சிங்கள மக்களை சரியான விதத்திலே வழிநடாத்தி எங்களோடு வந்து சேர்ந்து நிறைவேற்றுங்கள் என்று உங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். மகிந்த ராஐபக்ஸ அவர்களுக்கு நாங்கள் விடுக்கிற அந்த அழைப்பு இது தான்“ எனத் தெரிவித்துள்ளார்.