சீனாவின் ராணுவ மற்றும் பொருளாதார திட்டங்கள் குறித்து அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு ஆபிரிக்காவின் ஜிபூட்டியில் தனது கடற்படை தளத்தை அமைத்த சீனா அத்தளத்தில் தற்போது நீர்மூழ்கிக் கப்பல்கள், போர் வாகனங்கள், ஹெலிகொப்டர்கள் போன்றவற்றை நிறுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான், கம்போடியா, வனுவாட்டு உள்ளிட்ட இதர நாடுகளில் கூடுதல் ராணுவ தளங்களை அமைத்து மிகவும் முக்கியமான இந்திய – பசுபிக் பிராந்தியத்தில் தனது கால் தடத்தை விரிவுபடுத்த சீனா திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவின் பாதுகாப்பு மையமான பென்டகன் விடுத்துள்ள அறிக்கையில் ராணுவம் சார்ந்தும், ராணுவம் சாராத வகையிலும் உலகளவின் சீனா தன்னை விரிவுபடுத்தி வருகிறது. சீனா தனது வெளியுறவுக் கொள்கையின் ஒரு பகுதியாக 2012ஆம் ஆண்டுக்கும் 2016ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 20 பில்லியன் டொலருக்கு ராணுவத் தயாரிப்புகளை விற்பனை செய்துள்ளது. இதன் வாயிலாக உலகின் ஐந்தாவது மிகப்பெரிய ஆயுத வர்த்தக நாடாக சீனா உருவெடுத்துள்ளது.
ஜிபூட்டியிலுள்ள சீன கடற்படை தளத்தில் 450 மீட்டருக்கு கப்பல் நிறுத்துமிடத்தை சீனா கட்டமைத்து வருகிறது. இதில் நான்கு போர்க்கப்பல்களை நிறுத்த முடியும். இந்திய பெருங்கடல் மண்டலத்திலும், அதைக் கடந்த மற்ற இடங்களிலும் சீன ராணுவம் தனது தளங்களை அமைக்க வாய்ப்புள்ளது என எச்சரித்துள்ளது