எதிர்வரும் பெப்ரவரி இறுதிக்குள் நடைபெறும் 2வது உச்சி மாநாட்டில் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-உன்னை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சந்திக்க போவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
வட கொரிய அரசின் பிரதிநிதி கிம் ஜாங்-சோல் என்பவர் டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்த பின்னர் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. கடந்த வருடம் சிங்கப்பூரில் நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உச்சி மாநாட்டுக்கு பின்னர், அணு ஆயுத ஒழிப்பில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்பதனால் புதிய உச்சி மாநாடு நடைபெறும் இடம் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது வியட்நாமில் இது நடைபெறலாம் என அனுமானங்கள் நிலவுகின்றன.
கிம் ஜாங்-சோல் அமெரிக்கா சென்றிருப்பது பல மாதங்களாக வட கொரியாவோடு நடத்தி வரும் அணு ஆயுத ராஜதந்திரத் நகர்வின் முதல் அறிகுறி என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
ஜனாதிபதி கிம் ஜாங்-உன் , கிம் ஜாங்-சோலிடம் கொடுத்து அனுப்பிய கடிதத்தில் உள்ள விடயங்கள் வெளிவராத போதிலும் இன்னொரு உச்சி மாநாட்டுக்கு இது வித்திடும் என எதிர்hபார்க்கப்படுகின்றது.
வட கொரிய ஜனாதிபதி கிம்மின் வலது கரமாக வர்ணிக்கப்படும் முன்னாள் உளவுப்படை தலைவரான ராணுவ ஜெனரல் கிம் யோங்-சோல் தற்போது அமெரிக்காவுடனான வட கொரியாவின் பேச்சுவார்த்தைகளில் அந்நாட்டின் சார்பாக பங்கேற்கும் முக்கிய பிரதிநிதியாக உருவாகியுள்ளார்.
சர்ச்சைக்குரிய நபராக அறியப்படும் கிம் யோங்-சோல், 2010 ல் ராணுவ உளவுத்துறைத் தலைவராக இருந்த காலத்தில் தென் கொரிய போர்க்கப்பல்களின் மீதான வட கொரியாவின் தாக்குதல் திட்டங்களில் பின்புலமாக செயல்பட்டார் எனவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது