முல்லைத்தீவு – கேப்பாபுலவில் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி 697 நாட்களாக தொடர்ச்சியாக போராட்டம் நடத்திவரும் மக்கள் இன்றையதினம் முல்லைத்தீவிற்கு செல்லவுள்ள போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இன்றையதினம் வடக்கிற்கு செல்லும் ஜனாதிபதி வடக்கில் ஒருதொகுதி காணிகளை விடுவிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கேப்பாபுலவு மக்கள் தங்கள் காணிகளை விடுவிக்ககோரியே இவ்வாறு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் நடைபெறும் போதைப்பொருள் எதிர்ப்பு வாரத்தின் ஆரம்பநாள் நிகழ்வுற்காக ஜனாதிபதி மைத்திரிபால செல்லவுள்ள நிலையில் அவரின் கவனத்தினை ஈர்க்கும் வகையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக கேப்பாபுலவு போராட்ட மக்கள் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டமும் 684 நாட்களைக் கடந்த நிலையில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் அவர்களும் ஜனாதிபதியின் கவனத்தினை ஈர்க்கும் வகையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.