தெஹல்கா இதழின் முன்னாள் ஆசிரியர் மாத்யூ சாமுவேல், சயன், மனோஜ் உள்ளிட்ட ஏழு பேர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைப் பற்றி பேசவும் எழுதவும் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
குறித்த ஏழு பேர் மீது, ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் கேட்டு தமிழக முதலமைச்சர் சார்பில் நேற்றையதினம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடரப்பட்டிருந்தது.
மறைந்த தமிழகை முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் 2017ஆம் ஆண்டு நுழைந்த குழுவொன்று அங்கிருந்த காவலாளியைக் கொலை செய்துவிட்டு கொள்ளையில் ஈடுபட்டிருந்தமை தொடர்பாக கைது செய்யப்பட்ட சயன், மனோஜ் உள்ளிட்ட பலர் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இதனையடுத்து கொடநாடு சம்பவம் தொடர்பாக தெஹல்கா பத்திரிகையின் ஆசிரியர் சாமுவேல் வெளியிட்டிருந்த ஆவணப்படத்தில் பிணையில் வெளியே வந்துள்ள சயன் மற்றும் மனோஜ் சில கருத்துகளைத் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், கொடநாடு விவகாரத்தில் தன் பெயருக்கும், பதவிக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவதூறு பரப்புவதாக தெஹல்கா இதழின் முன்னாள் ஆசிரியர் மாத்யூ சாமுவேல், சயன், மனோஜ் உள்ளிட்ட ஏழு பேர் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்பட்நிலையிலேயே இவ்வாறு முதலமைச்சரைப் பற்றி பேசவும், எழுதவும் தடை விதித்ததோடு, ஏழு பேரும் இது தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 30ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.