ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு, வரும் ஜனவரி 25ஆம் திகதிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய முறையைப் பின்பற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ சார்பில் வேலைநிறுத்தப் போராட்டம் இடம்பெற்று வருகின்றது. இந்தப் போராட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி, சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில் எதிர்வரும் மார்ச் மாதம் தங்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறவுள்ளது எனவும் இந்த நேரத்தில் ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால், பொதுத் தேர்வில் பங்கேற்பதற்காக வழங்கப்படும் பயிற்சியில் பாதிப்பு ஏற்படும்.
தற்போது, 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் முக்கியமானதாகக் கருதப்படுவதனால் இந்தப் போராட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டுமெனவும் அம்மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டுமென தெரிவித்த நீதிபதிகள் வரும் ஜனவரி 25ஆம் திகதிக்குள் ஆசிரியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.