ஊழல், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அல்பர்டோ புஜிமோரி (Alberto Fujimori ) க்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பு ரத்து செய்யப்பட்டதை அடுத்து, அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அல்பர்டோ புஜிமோரி பெரு நாட்டில் 1990 முதல் 2000-ம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தபோது பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாகவும் அரசை எதிர்த்துப் போராடிய 25 பேரை கொலை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
80 வயதான அல்பர்டோ புஜிமோரி முதுமை காரணமாக சிறையில் உடல்நலம் பாதிக்கப்பட்டதனால் பெருவின் தற்போதைய ஜனாதிபதி பெட்ரோ பாப்லோ பொது மன்னிப்பு வழங்கினார்.
அதை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் தலைநகர் உட்பட பல்வேறு நகரங்களில் போராட்டங்களில் ஈடுபட்டதுடன் பல இடங்களில் காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
இதனையடுத்து கடந்த ஒக்டோபர் மாதம், இதில் தலையிட்ட நீதிமன்றம் பொது மன்னிப்பை ரத்து செய்ததுடன், நீதிமன்றம் நியமித்த மருத்துவக் குழு புஜிமோரியைப் பரிசோதித்து அறிக்கை அளித்துள்ளது.
அதில், புஜிமோரி பூரண உடல் நலத்துடன் உள்ளார். அவர் மருத்துவமனையில் இருக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டதனையடுத்து அவர் மீண்டும் நேற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்;