175
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எதனோல் கைப்பற்ற விவகாரத்தில் மதுவரித் திணைக்களத்தின் அதிகாரிகள், காவல்துறை உயர்மட்டங்கள் என தலையீடு செய்து சந்தேகநபர்களை விடுவிப்பதில் மும்முர முயற்சிகள் எடுக்கப்பட்டன என தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாழ்ப்பாணத்தில் விற்பனையாகும் பனம் சாராயத்தில் எதனோலின் அளவை அதிகமாகக் கலப்படம் செய்யும் சட்டவிரோத நடவடிக்கை கடந்த 2 ஆண்டுகளாக இடம்பெற்றது என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஏழாலையில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் மதுவரித் திணைக்கள அதிகாரிகளால் கிளிநொச்சி அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு பனம் சாராயத்தை தருவித்து விநியோகிக்கும் மதுபானக் கடை உரிமையாளர் ஒருவருக்கு எடுத்துவரப்பட்ட சுமார் 7 ஆயிரத்து 500 லீற்றர் எதனோல் (தூய மதுசாரம்) இன்று அதிகாலை சிறப்பு அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டது. மல்லாகம் இராணுவ முகாமிலிருந்து வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் ஏழாலைப் பகுதியில் வைத்து இந்தப் பெரும் தொகை எதனோல் கைப்பற்றப்பட்டது.
பாரவூர்தியில் ஒன்றில் வைத்து 20 லீற்றர் கொள்ளவுடைய 371 கொள்கலன்களே கைப்பற்றப்பட்டன. அந்தப் பாரவூர்தியில் இருந்த இருவரும் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு சுன்னாகம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு விநியோகிக்கப்படும் பனம் சாரயத்துக்கு கலப்படம் செய்வதற்காகவே இந்தப் பெரும் தொகை எதனோல் மதுபானக் கடை உரிமையாளரால் எடுத்துவரப்பட்டது என்று ஆரம்ப விசாரணைகளில் மூலம் தெரியவந்துள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
அத்துடன், மதுபானக் கடை உரிமையாளர் தலைமறைவாகியுள்ளார் என்றும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
2 ஆண்டுகளாகக் கலப்படம்.
கண்டியிலிருந்து பாரவூர்தி ஊடாக எடுத்துவரப்படும் எதனோல் ஏழாலைப் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாரவூர்தி ஒன்றில் மறைத்து வைக்கப்படும். அதனை பட்டா ரக வாகன ஒன்றில் தினமும் இரவு வேளைகளில் எடுத்துச் சென்று பனம் சாரயத்துடன் கலப்படம் செய்யப்படும்.
இவ்வாறு அதிகளவு எதனோல் கலப்படம் செய்யப்பட்ட பனம் சாராயம் மீளவும் போத்தலில் சீல் வைக்கப்படும். இந்த நடவடிக்கை சுமார் 2 ஆண்டுகளாக இடம்பெற்றுள்ளது. இந்த நடவடிக்கையை கடந்த சில நாள்களுக்கு முன்னர் வடிசாலை ஊழியர்கள் கண்டறிந்துள்ளனர். அதுதொடர்பில் ஆராய்ந்து மல்லாகம் இராணுவ முகாமுக்கு அவர்கள் தகவல் வழங்கியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடிப்படையினருக்கு மல்லாகம் இராணுவ அதிகாரி தகவல் வழங்கியுள்ளார். அதனடிப்படையில் ஏழாலைப் பகுதியில் சுற்றிவளைப்பை முன்னெடுத்த சிறப்பு அதிரடிப்படையினர், நீண்ட காலமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாரவூர்தி ஒன்றைச் சோதனையிட்டனர்.
இதன்போதே 20 லீற்றர் கொள்ளவுடைய 371 கொள்கலன்களில் எதனோல் (தூய மதுசாரம்) கைப்பற்றப்பட்டது.
மதுவரி அதிகாரிகள் தலையீடு/
சம்பவத்தை அறிந்த யாழ்ப்பாணம் மதுவரி அதிகாரி , சிறப்பு அதிரடிப்படையினருடனும் சுன்னாகம் காவல்துறையினருடனும் தொடர்பு கொண்டு சந்தேகநபர்களை விடுவிக்க அழுத்தம் வழங்கியதாக குற்றம் சாட்டப்படுகின்றது.
அத்துடன், சுன்னாகம் மதுபானக் கடை உரிமையாளருக்கு எதனோலை விநியோகிக்கும் கண்டியைச் சேர்ந்தவரும் காவல்துறை உயர்மட்டங்கள் ஊடாக சிறப்பு அதிரடிப் படையினருக்கு அழுத்தங்களை வழங்கியுள்ளார் எனவும் அறிய முடிகிறது.
இந்த நிலையில் வடக்கு மாகாண மது வரித் திணைக்களத்தினரின் விசாரணைக்காக சந்தேகநபர்கள் இருவரும் கிளிநொச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.
மதுபானக் கடை உரிமையாளர் கட்சி அலுவலகத்துக்குள் மறைவு.
இதேவேளை, சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டனர் எனத் தேடப்பட்ட சுன்னாகம் மதுபானக் கடை உரிமையாளர் தலைமறைவாகி உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. அவர் அரசியல் கட்சி ஒன்றின் அலுவலகத்துக்குள் மறைந்திருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
https://globaltamilnews.net/2019/110949/
Spread the love