தமிழ்நாடு மாநிலத்திலிருந்து இலங்கை அகதிகள் 83பேர் தாயகம் திரும்பவுள்ளனர். எதிர்வரும் 31ஆம் திகதி தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்த 39 குடும்பங்களைச் சேர்ந்த 83 பேர் தமது தாயகத்திற்கு திரும்பவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு அறிவித்துள்ளது.
இவர்கள், இந்தியாவிலிருந்து இரண்டு விமானங்களில் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி தெரிவித்துள்ளார். இதில், 34 பெண்களும் 49 ஆண்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலையை சேர்ந்த இவர்கள், பல்வேறு சந்தர்ப்பங்களில் யுத்தம் காரணமாக தமிழகத்திற்கு அகதிகளாக இடம்பெயர்ந்திருந்தனர்.
இவ்வாறு நாடு திரும்புபவர்களுக்கு இலவச விமான பயணச் சீட்டும், போக்குவரத்து வசதிகளும், மானியங்களும் வழங்கப்படவுள்ளதாகவும் வே. சிவஞானசோதி கூறினார். இதேவேளை தமிழகத்தில் இன்னமும் 65ஆயிரம் இலங்கைத் தமிழ் அகதிகள் முகாங்களிலும் 35 ஆயிரம் அகதிகள் அகதிமுகாங்களிற்கு வெளியிலும் வசிப்பதாகவும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி மேலும் தெரிவித்துள்ளார்.