தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அரசாங்கத்திற்கு வழங்கிய நிபந்தனையற்ற ஆதரவுக்கான பரிசே, முல்லைத்தீவு செம்மலை நீராவியடி புத்தர்சிலையும் விகாரையும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
கேப்பாபுலவில் இராணுவ முகாமின் முன்பாக, காணி ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடி வரும் மக்களை இன்று சந்தித்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி தொடர்ச்சியான போராட்டத்தை கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
இன்று பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கேப்பாபுலவு மக்களை சந்தி்தது உரையாடிய போது, 104 குடும்பங்களைச் சேர்ந்த, 171 ஏக்கர் காணிகளை டிசம்பர் 31இற்குள் விடுவிப்பதாக அளித்த வாக்குறுதியை ஜனாதிபதி மீறியுள்ளதாக கேப்பாபுலவு மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, இந்த மக்களின் நிலத்திற்கான போராட்டம் தொடர்பில், வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை சந்தித்து, ஜனாதிபதி இந்த மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாகவும் சிவசக்தி ஆனந்தன் உரையாடியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
வெளிநாடு சென்றுள்ள ஜனாதிபதி நாடு திரும்பியவுடன், கேப்பாபுலவு மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதியை சந்தித்து சாதகமான தீர்வு ஒன்றை பெற்றுத் தர முயற்சிப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் இதன்போது உறுதி அளித்தார் எனவும் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
இராணுவ மற்றும் காவல்துறையின் அச்சுறுத்தல்களின் மத்தியில் 700 நாட்களைக் கடந்தும் கேப்பாபுலவு மக்கள் தொடர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.