அடுத்து இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தன்னை போட்டியிடுமாறும் அதற்கான தயார்படுத்தல்களை செய்யுமாறும் தனது சகோதரரான மகிந்த ராஜபக்ஸ தன்னிடம் கூறியிருப்பதாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
லங்கா தீப பத்திரிகையின் ஞாயிறு சிறப்பு பதிப்பிற்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அமெரிக்க குடியுரிமை பிரச்சினை பெரும்பாலும் தீர்க்கப்பட்டு விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அடுத்த தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் போட்டியிடமாட்டார் எனவும் அதனால், தான் போட்டியிடுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
எனினும் கோத்தபாய ராஜபக்ஸ கூறிய இந்தக் கருத்தை மறுத்து செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி அலுவலக அதிகாரி ஒருவரின் கருத்தை அடிப்படையாக கொண்டே இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்யிட மகிந்த ராஜபக்ச ஆதரவு வழங்க உறுதியளித்திருப்பதாகவுமை் அவ் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மைத்திரிபால சிறிசேனவுக்கு, சிறிலங்கா பொதுஜன முன்னணி ஆதரவு தர மறுத்தால், அந்தக் கட்சியுடனான கூட்டணிக்கு வாய்ப்பில்லை என, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் மகிந்த சமரசிங்கவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.