திருவாரூர் அருகே திருக்காரவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிடக்கோரி 100-க்கும் மேற்பட்டோர் இரவு முழுவதும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலை மையமாக கொண்டு நாகை மாவட்டம் கரியாப்பட்டினம் வரை ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்து பல கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிடக்கோரி குடியரசு தினத்தன்றும் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் 200 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் தினமும் மாலை 6 மணி முதல் n காலை 6 மணி வரை காத்திருப்பு போராட்டம் நடைபெறும் எனவும் இந்த போராட்டம் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடும் வரை நடைபெறும் எனவும் போராட்ட குழு அறிவித்திருந்தது.
அதன்படி திருக்காரவாசல் கடைவீதியில் விவசாயிகள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தை மே;கொண்டுள்ளனர்.
நேற்று மாலை தொடங்கிய இந்த போராட்டம் விடிய விடிய அதிகாலை வரை தொடர்ந்து நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி அளித்தமத்திய அரசையும், வேதாந்தா நிறுவனத்தையும் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
இன்று காலை 6 மணியுடன் போராட்டம் நிறைவடைந்தது. இதையடுத்து இன்று மாலை 6 மணிக்கு மீண்டும் போராட்டம் நடைபெறும் என போராட்ட குழுவினர் அறிவித்துள்ளனர்.