இலங்கையில் ஜனவரி மாதத்தில் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிராகவும் நீதியை வலியுறுத்தியும் கறுப்பு ஜனவரி என்ற தலைப்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், செயற்பாட்டாளர்களின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் கலந்துகொணட ஊடகவியலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள், தமது எதிர்ப்பினை பதிவு செய்ததுடன் மெழுகுவர்த்தி ஏந்தியும், படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமற்போன ஊடகவியலாளர்களின் பதாதைகளை ஏந்தியும், போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கையில் இந்த நூற்றாண்டின் முதல் பத்தாண்டில் மாத்திரம் 17 செய்தியாளர்களும், ஊடகத் துறையைச் சேர்ந்த ஊழியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் இப் படுகொலைகள் மற்றும் கருத்துச் சுதந்திர மறுப்பு செயற்பாடுகள் தொடர்பில் நீதி வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், ஊடகவியலாளர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொடுஞ்செயல்கள் தொடர்பில் நீதியை வலியுறுத்தியும் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவுபடுத்தியும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்கும் முகமாகவும் இப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.