பறிபோகிறதா வவுனியா வடக்கு ஊற்றுப்புலம்? நடுக்காட்டிற்குள் பாரிய புத்தர் சிலை அமைத்துக் குடியேற்றம்!
Jan 29, 2019 @ 14:22
வவுனியா வடக்கில் காடுகள் அழிக்கப்பட்டு, பெரும்பான்மையினக் குடியேற்றம் இடம்பெறுவதாக நெடுங்கேணி பிரதேச சபை உறுப்பினர் துரைராசா தமிழ்ச் செல்வன் கூறியுள்ளார். அத்துடன் நடு காட்டிற்குள் பாரிய புத்தர் சிலை ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
வவுனியா வடக்கு, நெடுங்கேணி பிரதேச சபைக்கு உட்பட்ட ஊற்றுக்குளம் கிராமப் பகுதியில் இவ்வாறு காடு கழிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். தமிழ் மக்களுக்குச் சொந்தமான பகுதியிலேயே இந்தக் குடியேற்ற முயற்சிகள் இடம்பெறுகின்றன.
வவுனியா, வடக்கு, ஊற்றுக் குளம் பகுதியில் தமிழ் மக்கள் வசித்து வந்துள்ளனர். போர் காரணமாக அப் பகுதியிலிருந்த தமிழ் மக்கள் விரட்டியடிக்கப்பட்ட நிலையில், தற்போது அப்பகுதி காடு மண்டி காணப்படுகின்றது.
இந்த நிலையில் விவசாயம் செய்யச் சென்ற மக்கள் சிங்களக்குடியேற்றம் மற்றும் புத்தர்சிலை அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தெரிவித்துள்ளனர். அங்கு சில குடும்பங்கள் குடியேறியுள்ளதுடன் பிக்கு ஒருவர் குடியேறி பௌத்த விகாரை ஒன்றையும் அமைத்துள்ளார்.
அந்த பௌத்த பிக்குவுக்கு காவலாளிகள் இருவர் வழங்கப்பட்டு 3 பேர் தங்கியிருக்கின்றனர். அந்த விகாரையை சுற்றிலும் காடுகள் வெட்டப்பட்டு சிறிய கொட்டில்கள் போடப்பட்டு அங்கு பாரிய சிங்கள குடியேற்றம் ஒன்றுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இது குறித்து வனவள திணைக்களம் எந்த விதமான நடவடிக்கையினையும் எடுக்காத நிலையில் மிக சுதந்திரமாக காடழிக்கப்பட்டு குடியேற்றங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
அண்மையில் முல்லைத்தீவில் செம்மலையடி நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் புத்தர் சிலை அமைத்துள்ளமை தமிழ் மக்கள் மத்தியில் பாரிய விசனத்தை தோற்றுவித்துள்ள நிலையில், வவுனியா வடக்கு ஊற்றுக்குளமும் பறிபோகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த குடியேற்றம் மற்றும் புத்தர்சிலை திணிப்பு தொடர்பில் நெடுங்கேணி பிரதேச சபை உறுப்பினர் துரைராசா தமிழ்ச்செல்வன் வெளியிட்டுள்ள புகைப்படங்களே இவையாகும்.