பிரெக்ஸிற் உடன்படிக்கை குறித்து, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களுடன், பிரித்தானிய பிரதமர் தெரசா மேயின் பேச்சுவார்த்தை தொடரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பிரெக்ஸிற் உடன்படிக்கை தொடர்பான மாற்றுத்திட்டத்துக்காக பிரித்தானிய பிரதமர் தெரசா மே கொண்டு வந்த பரிந்துரைகள் மீதான வாக்கெடுப்பு வெற்றிப்பெற்றுள்ளது.
பிரதமர் மே-யினால் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட பிரெக்ஸிற் திட்டம் பாராளுமன்றில் படுதோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து இதற்கான மாற்றுத்திட்டத்தை பிரதமர் மே, கடந்த 21ஆம் திகதி மன்றில் சமர்ப்பித்தார். இந்த மாற்றுத்திட்டத்திற்கு தெரசா மே. ஆதரவு கோரிய நிலையில் நேற்று இதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டு வெற்றி பெற்றுள்ளது.
பிரதமர் தெரேசா மே-யின் முன்னைய பிரெக்ஸிற் திட்டத்திற்கு பலவகைகளிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அத்திட்டம் பிரித்தானிய பாராளுமன்றினால் நிராகரிக்கப்பட்டது. அந்த வாக்கெடுப்பில் 432 பேர் பிரெக்ஸிற் திட்டத்திற்கு எதிராகவும் 202 பேர் ஆதரவாகவும் வாக்களித்தனர். இதன்மூலம் மே-யின் திட்டம் 230 வாக்குகளால் தோல்வியடைந்தது. இது பிரித்தானிய அரசியல் வரலாற்றில் ஆளும் அரசு எதிர்கொண்ட மாபெரும் தோல்வியாகவும் இது பார்க்கப்பட்டது.
இதனால் மே பதவி இழக்கும் நிலையும் ஏற்பட்டது. எனினும், அதனைத் தொடர்ந்து கொண்டு வரப்பட்ட மேயின் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் அவர் வெற்றி பெற்றதன் மூலம் அவரது ஆட்சி காப்பாற்றப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.