இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 7ஆம் திகதி அல்லது அதற்கு முந்திய ஒரு சனிக்கிழமையில் நடத்தப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.
முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தலுக்கான அழைப்பை விடுக்காமல், தனது பதவிக்காலம் முழுவதுமாக பதவியில் நீடிக்க முடிவு செய்தால், ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 9ஆம் திகதிக்கும் டிசம்பர் மாதம் 9ஆம் திகதிக்கும் இடையில் நடத்தப்பட வேண்டியது அவசியம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் 2019ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலை ஒக்டோபர் 22ஆம் திகதி இறுதி செய்வதற்கு தேர்தல் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது. அன்றைய தினமே தேர்தலுக்காக அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டால், குறைந்தபட்சம் அடுத்த நான்கு வாரங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கூறப்படுகிறது. அவ்வாறாயின் டிசம்பர் 7ஆம் திகதி சனிக்கிழமை அல்லது அதற்கு முந்திய ஒரு சனிக்கிழமையில் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்வு கூறப்படுகிறது.
இதேவேளை ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற அழுத்தங்கள் எதிர்கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்படுவதுடன், எதிர்வரும் நவம்பர் மாதத்திற்கு முன்னதாக மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாவிட்டால் தான் பதிவியில் இருந்து விலக நேரிடும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.