குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோத செயற்பாடுகளின் அதிகரிப்புக்கு மாவட்டத்தில் உள்ள அரசியல்வாதிகள் , மற்றும் அதிகாரிகளின் அசமந்த செயற்பாடுகளே காரணம் என கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழு தெரிவித்துள்ளது.
இன்று கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பிரஜைகள் குழுவின் செயலாளர் சி.ஜீவநாயகம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோத போதைப்பொருள் பாவனை, மணல் கடத்தல், காடுகள் அழித்தல் உள்ளிட்ட பல செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றவர்கள் இந்த விடயங்கள் தொடர்பில் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமை, என்பன இச் செயற்பாடுகளை ஊக்குவித்து வருகிறது.
கடந்த வாரம் ஜனாதிபதியின் பணிப்புக்கமைய மேற்கொள்ளப்பட்ட தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரத்தில் கோணாவில் மகா வித்தியாலயத்தில் கஞ்சா விற்பனை பற்றிய தகவல் வழங்கிய மாணவன் அச்சுறுத்தப்பட்டு தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட விடயம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இதற்காக எதிர்வரும் சனிக்கிழமை 02-02-2019 அன்று காலை ஒன்பது மணிக்கு கிளிநொச்சி டிப்போச் சந்தியிலிருந்து கண்டன் போராட்டம் ஒன்று கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் போது மேற்கொள்ளப்படவுள்ள ஊர்வலம் கிளிநொச்சி காவல் நிலையம் வரை சென்றடைந்து அங்க பிரதி காவல்துறைமா அதிபருக்கான மகஜரும் கையளிக்கப்படவுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
எமது மாவட்டத்தில் இனி வரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாது இருக்க அனைத்து தரப்பினர்களும் இணைந்து செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்