ஐக்கிய தேசிய முன்னணியுடன் தேசிய அரசாங்கத்தை நிறுவுவதற்கான யோசனை ஒன்று நேற்றையதினம் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியுடன், அதன் கொள்கைகளோடு இணங்கும் கட்சி அல்லது கட்சிகளை ஒன்றிணைந்து, இந்தத் தேசிய அரசாங்கம் உருவாக்கப்படுமென பாராளுமன்றப் பொதுச் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜபக்ஸ அரசாங்கத்தின் போது பெற்றுக்கொள்ளப்பட்ட பாரிய கடன்களைச் செலுத்தி, நாட்டு மக்களுக்கு, உயர்ந்தபட்ச நிவாரணங்களை வழங்குவதற்கும் நாட்டின் ஜனநாயகத்தை உறுதி செய்வதற்கும் விரும்பும் அனைத்துக் கட்சிகளும், இந்தத் தேசிய அரசாங்கத்துடன் இணைந்துகொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான அழைப்பினை அவை முதல்வரும் அரச தொழில் முயற்சி, கண்டி மரபுரிமைகள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல விடுத்துள்ளார். தேசிய அரசாங்கத்தில் இணையும் கட்சிகள் எவையென அந்த யோசனை தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்படும் போது தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.