இலங்கையின் 71ஆவது சுதந்திரதினம் எதிர்வரும் 4ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில், கேப்பாபுலவு மக்கள் குறித்த நாளை துக்க தினமாக அனுஷ்டிக்கவுள்ளனர். 704 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கேப்பாபுலவு மக்கள், இலங்கை சுதந்திரதினத்தன்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடாத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு கேப்பாலுவு இராணுவ முகாமிற்கு முன்பாக பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தொடர்ச்சியாக இந்த மக்கள் போராடி வருகின்ற நிலையில் இலங்கை சுதந்திர தினத்தை கறுப்பு பட்டியணிந்து துக்க தினமாக கொண்டாடவுள்ளதாக அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.
704 நாட்களாக தமது பூர்வீக நிலத்திற்காக போராடி வருவதாகவும், வாழ இடமற்று, தொழிலற்று, பிள்ளைகளின் கல்வியை இழந்து தெருவோரத்தில் நிற்கும் தமக்கு இது சுதந்திர தினம் இல்லை எனவும் இலங்கை அரசே இந்த நாளை துக்க தினமாக பிரகடனப்படுத்தியிருப்பதாகவும் கேப்பாபுலவில் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்
சுதந்திர தினத்தில் தமது காணிகளை அரசு விடுவிக்க வேண்டும் எனவும் ம் அரசின் ஆக்கிரமிப்புக்கு எதிராக சுதந்திரனத்தை எதிர்க்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ள கேப்பாபுலவு மக்கள், தமது போராட்டத்திற்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.