169
ஆன்மீகவாதிகள் இறைவன் துரும்பிலும் இருப்பான், தூணிலும் இருப்பான் என்பார்கள். இறை நம்பிக்கையை மக்கள் மத்தியில் வளர்ப்பதற்கும், வாழ்வியலில் அவர்களை நல்வழிப்படுத்தவதற்குமாக இதனைக் கூறுவார்கள். ஆனால் இறைவன் எங்கும் நிறைந்திருக்கின்றானோ இல்லையோ, இலங்கையைப் பொருத்தமட்டில் அரசியலே எங்கும் வியாபித்திருக்கின்றது. எங்கும் அரசியல் எதிலும் அரசியல் என்பதே நிலைமையாக உள்ளது. அதனை நிகழ்வுகளின் ஊடாகவும், நடவடிக்கைகளின் ஊடாகவும் தெளிவாகக் காணவும் உணரவும் முடிகின்றது.
ஆயினும், இது நாட்டு மக்களை நல்வழிப்படுத்துவதற்கான அரசியலாகத் தெரியவில்லை. மாறாக நாட்டு மக்களைத் துண்டாடி, பல்வேறு பிரிவுகளாக்கி அவர்களை அழிவுசார்ந்ததோர் எதிர்காலத்தை நோக்கி நகர்த்திச் செல்வதையே இலக்காகக் கொண்டிருக்கின்றது.
இனவாத அரசியல், மதவாத அரசியல், தொழில் ரீதியான அரசியல், இலாபமீட்டுவதற்கான அரசியல், அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கான அரசியல், ஏமாற்று அரசியல் என்று எண்ணற்ற முகங்களைக் கொண்டதாக இந்த அரசியல் பரிணமித்திருக்கின்றது. இந்த அரசியல் வழிமுறைகளின் மூலம் அரசியல்வாதிகளே நன்மை அடைந்தவர்களாகக் காணப்படுகின்றார்கள்.
நல்ல அரசியலின் மூலம் நாடும், நாட்டு மக்களும் முன்னேற்றம் அடைய வேண்டும். அவர்கள் ஒரு தாய் மக்கள், ஒரு தேச மக்கள் என்ற பரந்த மனப்பாங்குடன் இணைந்து வாழ்வதற்குரிய சூழல் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இங்கு நிலைமைகள் அவ்வாறில்லை. எல்லாமே தலைகீழாகவே இருக்கின்றன. நிச்சயமற்ற ஒரு புள்ளியை நோக்கியதாகவே நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் பயணமும் அமைந்திருக்கின்றது.
ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கையற்று இருப்பதையும், மக்கள் இனக்குழும ரீதியாகவும், மத ரீதியாகவும், பிரதேச ரீதியாகவும் பிளவுபட்டு கிடப்பதையே இந்த அரசியல் இலக்காகக் கொண்டிருக்கின்றது.
ஆங்கிலேயர்கள் பிரித்தாளும் தந்திரத்தைக் கைக்கொண்டு மக்களை அடிமைப்படுத்தி உள்ளுர் வளங்களைச் சுரண்டினார்கள். பொருளாதார ரீதியான சுரண்டல் நடவடிக்கைக்கு இந்த பிரித்தாளும் தந்திரம் அவர்களுக்கு மிகவும் வாய்ப்பாக அமைந்திருந்தது. அடிமைத் தளையில் இருந்து மீள்வதற்கு மக்கள் தங்களுக்கிடையில் எழுந்துள்ள பிளவைத் தகர்த்து, அந்தத் தடையைக் கடந்து செல்ல வேண்டிய கட்டாய நிலைமைக்கு ஆளாகியிருந்தார்கள். இருப்பினும் கடினமான சவால்களை எதிர்கொண்டு அவர்கள் தமது சுதந்திரத்துக்காகப் பாடுபட்டார்கள்.
ஆனால் இப்போதைய பிளவுபட்ட அரசியல் நிலைமையின் சவால்களை எதிர்கொள்வதற்கு உறுதியான அரசியல் தலைமையை மக்கள் மத்தியில் காண முடியவில்லை. தன்னெழுச்சி கொண்ட மக்கள் தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகப் போராடுகின்றார்கள். இரு முனைகளில் அவர்கள் போராட வேண்டிய கட்டாய நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். குறிப்பாக தமிழ் மக்களுக்கே இந்த நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.
தமிழ் மக்கள் தமது உரிமைகளை இழந்தவர்களாகவும், தொடர்ச்சியான அடக்குமுறைகளுக்கும், ஆக்கிரமிப்புக்கும் உள்ளானவர்களாகவுமே திகழ்கின்றார்கள். உரிமைகளுடன் வாழ்வதற்காகப் போராட வேண்டிய அவர்கள் தங்கள் மீது வலிந்து திணிக்கப்படுகின்ற அடக்குமுறைகள், ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும் போராட வேண்டியவர்களாக இருக்கின்றார்கள்.
தமது உரிமைகளை மறுத்து, ஆக்கிரமித்து அடக்கியொடுக்குபவர்களுக்கு எதிராகப் போராடுகின்ற அதேவேளை, தங்களின் அரசியல் தலைவர்களாக அந்தஸ்து பெற்றிருப்பவர்களைத் தங்களுடைய வழியில் திருப்புவதற்கான போராட்டத்திலும் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியிருக்கின்றார்கள். இந்த நிலைமை வடக்கு கிழக்கு மலையகம்; என்ற எல்லைக் கோட்டைக் கடந்து, தமிழ் மக்கள் மத்தியில் வியாபித்திருக்கின்றது.
மலையக நிலைமை
பெருந்தோட்டப் பகுதி என்றழைக்கப்படுகின்ற தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில் வாழ்கின்ற தமிழ் மக்கள் அடிமை சாசனத்திற்கு உட்பட்டவர்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். பெருந்தோட்டங்களில் தொழில் செய்வதற்காக ஆங்கிலேயரினால் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு வலிந்து கொண்டுவரப்பட்ட அந்த மக்கள் இன்னும் அந்த அடிமைத் தளையின் பிடியில் இருந்து விடுபட முடியாதவர்களாகத் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
தமிழகத்தில் விவசாயிகளாக சுதந்திரமாக வாழ்ந்தவர்கள் மத்தியில்; தேனும் பாலும் ஓடுவதாக செய்யப்பட்ட பிரசாரத்தை நம்பி இலங்கைக்கு வந்தவர்களின் வாரிசுகளான இன்றைய மலையக மக்கள், நவீன அடிமைகளாக வாழ்கின்ற ஒரு வாழ்க்கைச் சிக்கலில் அகப்பட்டிருக்கின்றார்கள்.
மனிதனின் வாழ்வுரிமைக்கு அடிப்படைத் தேவையாகிய காணி உரிமை, வீட்டு உரிமை அற்றவர்களாகவே அந்த மக்கள் வாழ்கின்றார்கள். பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்காக ஆங்கிலேயர்களினால் அமைக்கப்பட்ட வரிசை முறையில் காற்றோட்ட வசதியற்ற, 6, 12 அல்லது 24 அறைகளைக் கொண்ட முகாம் அமைப்பைக் கொண்ட கட்டிடங்களே (6 வழ 12 ழச 24 டiநெ சழழஅள in ழநெ டiநெ டியசசயஉம) அந்த மக்களின் வாழ்விடங்களாக இருந்தன. இந்த வீடமைப்பு முறையில் இருந்து இன்னும் அந்த மக்கள் முழுமையாக விடுபடவில்லை என்பது சோகம் நிறைந்த கவலைக்குரிய விடயமாகும்.
தோட்டங்களில் வாழ்ந்து தோட்டங்களிலேயே தமது வாழ்க்கையை முடித்துக்கொள்ள வேண்டிய ஒரு வாழ்க்கை விதிக்குள் அவர்கள் சிக்க வைக்கப்பட்டிருந்தார்கள். தோட்டங்களுக்குள்ளேயே முக்கியமான அடிப்படை வசதிகளை வரையறுக்கப்பட்ட முறையில் ஆங்கிலேயர்கள் அவர்களுக்குச் செய்திருந்தனர். குறைந்த செலவில் கூடிய உற்பத்தியையும் கூடிய இலாபத்தையும் பெறுவதை நோக்மகாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. கூலித் தொழிலாளிகளின் எண்ணிக்கையும், தொழிலுக்கான தொழிலாளர் சக்தியும் குறைந்துவிடக் கூடாது என்பதற்காக வெளியுலக வாழ்க்கை அவர்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. தலைமுறை தலைமுறையாக தோட்டத்தொழிலையே அவர்கள் பின்பற்றுவதற்கு ஆளாக்கப்பட்டிருந்தார்கள். இந்த நிலைமையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், அவர்களுடைய வாழ்வியலும், உழைப்புக்கேற்ற ஊதியமும் இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினைகளாகவே தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் என்றால், அவர்களே வறுமையின் அடையாளமாகத் திகழ்கின்றார்கள். உழைப்புக்கேற்ற ஊதியம் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. ஆங்கிலேயர்களினால் அறிமுகப்படுத்தப்பட்ட நாட்கூலி சம்பள முறையில் இருந்து அந்த மக்கள் இந்த நவீன காலத்திலும் விடுதலை பெறவில்லை. தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களின் உரிமைகள் உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டாலும், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உரிமைகள் மறுக்கப்பட்ட ஒரு கட்டமைக்குள்ளேயே இன்னும் சிக்கியிருக்கின்றார்கள்.
தோட்டங்களின் உரிமையும், நிர்வாகப் பொறுப்புக்களும் முதலாளிமார் சம்மேளனத்தின் இரும்புப் பிடிக்குள்ளேயே சிக்கியிருக்கின்றன. வெகுசில தோட்டங்களே மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்திச் சபையினால் அரச நிர்வாகத்திற்கு உட்பட்டிருக்கின்றன. ஆரம்பத்தில் தனியார் கம்பனிகளின் உடைமைகளாக ஆங்கிலேயரின் நேரடி பொருளாதார வலையமைப்புக்குள் பெருந்தோட்டங்கள் நிர்வகிக்கப்பட்டிருந்தன.
ஆனால் 1972 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இலங்கையின் – சிறிலங்கா சோஷலிசக் கொள்கையும், காணிப் பயன்பாட்டில் அரசாங்கத்தினால் கொண்டு காணிச்சீர்திருத்த நடைமுறைகளும் பெருந்தோட்டங்களை தேசிய மயமாக்கின. இதனால் அரசாங்கத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் வந்த தோட்டத்துறை பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்ததாகக் கருதப்பட்ட போதிலும், அரசியல் தலையீட்டுடன் கூடிய ஊழல் நிறைந்த நிர்வாக நடைமுறைகளும், கிராமிய சிங்கள மக்களுக்கு தோட்டப்பிரதேசங்களின் வசதிகள் மிகுந்த பகுதிகளில் காணிகளை ஒதுக்கி குடியேற்றங்களை மேற்கொண்ட நடவடிக்கைகளும் பெருந்தோட்டத்துறையில் அரசுக்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்தியிருந்தன.
ஊழல்களுக்கும் தோட்டத்துறையின் நட்டத்திற்கும் பரிகாரம் காண்பதற்காக 1992 ஆம் ஆண்டு பெருந்தோட்டங்கள் மீண்டும் தனியார் மயப்படுத்தப்பட்டன. இந்தத் தனியார் மயப்படுத்தலின்போது அரசினால் அனுமதிக்கப்பட்ட அளவற்ற சுதந்திர காணிப் பயன்பாடு, தேயிலை, இறப்பர், தென்னை உற்பத்திக்கு அப்பால், தொழில் விருத்திக்காக சட்டத்திற்கு உட்பட்ட எந்தத் தொழிலையும் செய்யலாம் என்பதற்கான அனுமதி என்பன பெருந்தோட்டங்களின் மரபுவழியிலான் பொருளாதார உற்பத்தித் திறனையும், தோட்டத்தொழிலாளர்களின் வாழ்க்கையையும் பெரிதும் பாதித்தன.
பெருந்தோட்டத்துறை மக்களின் வீட்டு உரிமைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வீட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டபோதிலும், அவர்கள் அவற்றில் முழுமையாக உள்வாங்கப்படவில்லை. நேர்த்தியான முறையில் தொழிலாளர்கள் அனைவருக்கும் நன்மை கிடைக்கத்தக்க வகையில் அந்தத் திட்டங்கள் வடிவமைக்கப்படவில்லை. அந்த வகையில் அந்த வீட்டுத்திட்டம் செயற்படுத்தப்படவுமில்லை. இதனால் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை உரிமையுடன் கூடிய வாழ்வியலுக்கான காணி உரிமை, வீட்டு உரிமை பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாமல் வீங்கிப் பருத்திருக்கின்றது என்றே கூற வேண்டும்.
கிடைத்தும் கிடைக்காத சம்பள உயர்வு
சம்பளப் பிரச்சினையைப் பொருத்தமட்டில், நாட்கூலியாக ஆயிரம் ரூபாவாக சம்பளம் உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு பல வருடங்களாக அதற்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தைப் பெற முடியாத நிலையில் உள்ள தொழிலாளர்களே தன்னெழுச்சி பெற்று இந்தப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தார்கள். அந்தப் போராட்டங்களுக்கு உரிய வலுவானதோர் அரசியல் தலைமைத்துவம் அவர்களுக்குக் கிடைத்திருக்கவில்லை. ஆயினும் சோரவடையாத அவர்களின் போராட்டத்தின் மூலம் உரிய தீர்வு இன்னுமே கிடைக்கவில்லை.
முதலாளிமார் சம்மேளனத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் அரசாங்கம் ஒதுங்கியிருக்கின்ற போக்கு அல்லது பட்டும்படாமல் பங்கு கொள்கின்ற கொள்கையையே கடைப்பிடித்து வருகின்றது. புரையோடிப் போயுள்ள சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக இளைஞர்கள் களத்தில் குதித்ததும், ஆயிரம் ரூபா இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதும், மலையகம் மட்டுமல்லாமல் வடக்கு கிழக்கு உட்பட்ட தமிழ்ப்பிரதேசங்கள் அனைத்தும் போராட்டத்திற்கான போர்க்கோலம் பூண்டன. இந்த எழுச்சி அரசாங்கத்தை மட்டுமல்லாமல் சிங்கள பௌத்த பேரின தீவிரவாத சக்திகளையும் கூட திகைப்படையச் செய்துள்ளது.
இந்த நிலையில் சம்பளப் பிரச்சினைக்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், (இ.தொ.கா) இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கம் (இ.தே.தோ.தொ.ச) பெருந்தோட்டதொழிற்சங்க நிலையம் (பெ.தொ.நி) உள்ளிட்ட கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்கள், தோட்ட கம்பனிகள் இலங்கை முதலாளிமார் சம்மேளனம் என்பவற்றுடன் தொழில் அமைச்சரும், பெருந்தோட்ட கைதொழில் அமைச்சரும் கலந்து கொண்ட பேச்சுவார்த்தையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளத்தை 750 ரூபாவாக உயர்த்தி தீர்வு காணப்பட்டிருக்கின்றது. அதற்கான ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டுவிட்டது.
ஆனால் சம்பளப் பிரச்சினைக்கான இந்தத் தீர்வு, நாளாந்த அடிப்படைச் சம்பளம் ஆயிரம் ரூபாவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அடித்து நொறுக்கியிருக்கின்றது. இதனால் சம்பள உயர்வுக்காகப் போராடிய தொழிலாளர்களும் அவர்களுக்காக ஒத்துழைத்தவர்களும் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாகியிருக்கின்றார்கள்.
ஏனெனில், கடந்த 2016 ஆம் ஆண்டின் கூட்டு ஒப்பந்தத்தில் வழங்கப்பட்ட 500 ரூபா அடிப்படை சம்பளத்தை 700 ரூபாவாக உயர்;த்தி, அதனுடன் விலைக்கொடுப்பனவாக 50 ரூபாவைச் சேர்த்து, நாள் ஒன்றுக்கான சம்பளம் 750 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
ஆனால் 2016 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி தொழிலாளர்களுக்கு மொத்த சம்பளமாக 730 ரூபா கிடைத்திருந்தது என்றும், ஆனால் இப்போது காணப்பட்டள்ள தீர்வின்படி அது 750 ரூபாவாகி உள்ளது என்றும், எனவே, புதிய ஒப்பந்தத்தின்படி தொழிலாளர்களுக்கு 20 ரூபாய் மாத்திரமே சம்பள உயர்வு கிடைத்திருக்கின்றது. இதன் மூலம் தோட்டத் தொழிலாளர்கள் தந்திரோபாய ரீதியில் ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள் என்று இந்தத் தீர்வை எதிர்ப்பவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த கூட்டு ஒப்பந்தத்தில் அரசாங்கம் பங்கெடுத்திருக்கின்ற போதிலும், தொழிலாளர்களுக்கு நியாயமான முறையில் சம்பள உயர்வு கிடைப்பதற்கான அவர்களுடை நலனில் அரசாங்கம் உறுதியாகச் செயற்படத் தவறியிருக்கின்றது என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள்.
இந்தத் தீர்வின்படி, 500 ரூபாவாக இருந்த அடிப்படைச் சம்பளம் 700 ரூபாவாக உயர்த்தப்பட்டிருக்கின்றது. அந்த வகையில் உயர்த்தப்பட்டுள்ள 200 ரூபா சம்பள உயர்வுக்கான பணம் நிலுவையாக உள்ளது எனவும், அந்த நிலுவைப் பணத்தை முதலாளிமார் சம்மேளனம் மற்றும் தோட்டக்கம்பனிகளுகளுக்குப் பதிலாக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் அரசாங்க நிறுவனமான இலங்கை தேயிலை சபையிலிருந்து 100 மில்லியன் ரூபாவை வழங்க அரச தரப்பில் உடன்பாடு காணப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தோடடத் தொழிலாளர்களின் உழைப்பில் தோட்டக் கம்பனிகளும் முதலாளிமார் சம்மேளனமுமே இலாபமீட்டி வருகின்றன. எனவே சம்பள உயர்வு வழங்கப்படும்போது அந்த நிலுவையை அவர்களே வழங்க வேண்டும். ஆனால் இந்த விடயத்தில் அரசாங்கம் தலையிட்டு அதற்கான நிதியைத் தனக்குக் கீழ் இயங்குகின்ற ஒரு நிறுவனத்தின் ஊடாக வழங்க முன்வந்திருப்பது தோட்டத் தொழிலாளர்களை அரசாங்கம் புறந்தள்ளியிருப்பதையே காட்டுகின்றது என்றும் இந்த சம்பள உயர்வை முறையற்றது என்று எதிர்ப்பவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள்.
அதேவேளை, கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்பாகவே அரசாங்கத்துடன் இணைந்துள்ள தமிழ் முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் மீது அழுத்தத்தைப் பிரயோகித்து, ஆயிரம் ரூபா சம்பள உயர்வைப் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதனைத் தவறவிட்டுள்ள தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் அரசாங்கம் தொழிலாளர்களைக் காட்டிக்கொடுத்துவிட்டது என்றும் உற்பத்தி ஊக்குவிப்பு கொடுப்பனவான 140 ரூபாவையாவது வழங்க வேண்டும், இல்லையேல் அரசாங்கத்துடன் இணைந்திருப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டி ஏற்படும் என்று கூறுவது ஓர் அரசியல் நடிப்பே தவிர வேறொன்றுமில்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
ஏனெனில் சம்பள உயர்வுக்கான கூட்டு ஒப்பந்தம் என்பது கேள்விக்கு உட்படுத்தப்பட முடியாதது மட்டுமன்றி, அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடவும் முடியாது. அந்த ஒப்பந்தத்தில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் மாத்திரமே அதனை ரத்துச்செய்ய முடியும். அந்த வகையில் மீண்டும் ஒரு பேச்சுவார்த்தை நடத்தி புதிதாக ஓர் உடன்பாட்டுக்கு வந்து புதிய ஒப்பந்தம் செய்யப்படும் வரையில் அது நடைமுறையில் இருக்கும். அதனை அசைக்க முடியாது.
இந்த நிலையில் மொத்தத்தில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அரசியல் நாடகம் ஒன்றே அரங்கேறியிருக்கின்றது. எனவே, இது தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றுவதற்காக முன்னெடுக்கப்பட்ட மற்றுமோர் அரசியல் சூழ்ச்சி என்றே உரிய சம்பள உயர்வு கிடைக்காமல் ஏமாற்றமடைந்துள்ள தொழிலாளர்கள் கருதுகின்றார்கள். அரசாங்கத்தின் மீது மட்டுமல்ல. தமது நலன்களுக்காக அரசியல் செய்வதாகக் கூறுகின்ற தொழிற்சங்க அமைப்பிலான அரசியல் சக்திகளின் மீதும் அவர்கள் நம்பிக்கை வைக்க முடியாத அவல நிலைக்கு ஆளாகியிருக்கின்றார்கள்.
வடக்கு கிழக்கு நிலைமை
புதிய அரசியலமைப்பு ஒன்றின் மூலம், சமஸ்டி முறையிலான ஓர் அரசியல் தீர்வை எட்டிவிட முடியும் என்ற நம்பிக்கையில் எதிர்ப்பு அரசியல் உத்தியைக் கைவிட்டு, அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி வருகின்றது. எனினும், அந்த ஒத்துழைப்பைப் பயன்படுத்தி, வடக்கு கிழக்குப் பிரதேச மக்கள் எதிர்கொண்டுள்ள எரியும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அந்த மக்களின் பிரதான அரசியல்; தலைமையாகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தவறியிருக்கின்றது. இதனால் மக்கள் கூட்டமைப்பின் மீது நம்பிக்கை இழந்திருக்கின்றார்கள்.
வலிந்து ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளமை, அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றமை, இராணுவம் கைப்பற்றியுள்ள காணிகளின் விடுவிப்பு, சிங்கள மக்கள் எவரும் இல்லாத தமிழ்ப்பிரதேசங்களில் அடாத்தாக புத்தர் சிலைகளையும் பௌத்த விகாரைகளையும் அமைப்பது, நீண்டகால இடப்பெயர்வு காரணமாக காடடர்ந்துள்ள பொதுமக்களின் கிராமக் காணிகளில் இடம்பெயர்ந்தவர்களை மீள் குடியேற விடாமல் காட்டுப்பிரதேசம் என்றும் தொல்பொருள் நிலையங்கள் இருக்கின்றன என்றும் கூறி வனவள திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் என்பன தடுக்கின்றமை போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்குத் தமிழ் மக்கள் முகம் கொடுத்திருக்கின்றார்கள்.
யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்களாகின்ற போதிலும் மீள்குடியேற்றப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியவில்லை. அரசியல் கைதிகளின் விடுதலை பிச்சுப் பிடுங்கல் முறையிலேயே அரசாங்கத்தினால் கையாளப்படுகின்றது. இராணுவத்தின் பிடியில் உள்ள காணிகளை விடுவிப்பதை ஏனோ தானோ என்ற ரீதியிலும் புண்ணியத்திற்காக விட்டுக்கொடுக்கின்ற ஒரு போக்கிலுமே அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.
மக்கள் காலம் காலமாகக் குடியிருந்த பிரதேசங்களைவிட்டு, யுத்தம் காரணமாக பாதுகாப்புக்காகவே இடம்பெயர்ந்திருந்தார்கள். அந்தப் பூர்வீக நிலங்களுக்கு அரசாங்கத்தின் கால தாமதம் மிக்க மீள்குடியேற்ற நடவடிக்கை காரணமாக, அவர்கள் காலம் தாழ்த்தி திரும்பி வரும்போது, திணைக்களங்களைப் பயன்படுத்தி மீளக்குடியேற முடியாதவாறு துரத்தியடிக்கின்றது.
ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்படுகின்ற அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற முறையில் ஆதரவளிக்கின்ற தமது அரசியல் தலைமை மீது நம்பிக்கையற்றவர்களாகவே சிறையில் வாடுகின்ற அரசியல் கைதிகள் மற்றும் அவர்களுடைய உறவினர்களும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும், இராணுவத்திடம் காணிகளைப் பறிகொடுத்துள்ள மக்களும் தன்னெழுச்சி பெற்று, தமது அரசியல் தலைமைகளைப் புறன்தள்ளி, தாங்களாகவே போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள். இந்தப்; போராட்டங்கள் ஒரு வருட காலத்தையும் கடந்து முன்னெடுக்கப்படுகின்ற ஒரு நிலைமையைக் காண முடிகின்றது.
இந்தப் போராட்டங்களுக்கு உரிய வலுவானதோர் அரசியல் தலைமையை வழங்கவோ அல்லது தொடர்ச்சியான உறுதிமிக்க இந்தப் போராட்டங்களைச் சுட்டிக்காட்டி, அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வழியில் அரசாங்கத்தை நகர்த்திச் செல்லவோ தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முன்வரவில்லை.
இதனால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அரசாங்கத்துடனும், அரச படைகளுடனும் போராடுகின்ற அதேநேரம் தங்களுக்கு வலுவானதோர் அரசியல் தலைமையை உருவாக்கிக் கொள்வதற்காகத் தமது அரசியல் தலைமைகளுடனும் போராட வேண்டிய நிலைமைக்கு ஆளாகியிருக்கின்றார்கள்.
அரசியல் என்பது மக்களை அதுவும் பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்றி காலம் கடத்துகின்ற ஒரு செயற்பாடாகவே நாட்டில் பரிணமித்திருக்கின்றது.
சிறந்த தலைமைத்துவத்தை வழங்கி மக்;களை சீரான முறையில் வழிநடத்தி நாட்டை சுபிட்சமடையச் செய்கின்ற அரசியலை நாட்டில் காண முடியவில்லை. அரசியலில் தலைவர்களே மக்களுக்குத் தலைமையேற்று வழிநடத்திச் செல்ல வேண்டும். ஆனால் இங்கு மலையகம் மற்றும் வடக்கு கிழக்குப் பிரதேசங்களைப் பொருத்தமட்டில் பாதிக்கப்பட்ட மக்களே தன்னெழுச்சி பெற்று தமது தலைவர்களைப் பின்னால் தள்ளி முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கின்றார்கள்.
இது, இழுத்துச் செல்வதற்காக முன்னால் கட்டப்பட வேண்டிய காளைகளை வண்டியின் பின்னால் கட்டியிருப்பதைப் போன்றிருக்கின்றது. இந்தப் பின்னடைவில் இருந்து, அரசியல் அவல நிலையில் இருந்து தமிழ் மக்கள் எப்படி எப்போது விடுபடப் போகின்றார்கள் என்பது தெரியவில்லை.
Spread the love