நாட்டில் தேசிய அரசாங்கம் ஒன்று அமைந்தால் தேசிய இனப்பிரச்சினையை தீர்க்க முடியும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கையின் இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து மீண்டும் அட்சியமைத்தால் அது வரவேற்கப்பட வேண்டியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்து, அனைத்துக் கட்சியினருடனும் இணைந்து பயணிக்கத் தயார் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ள நிலையில், தேசிய அரசாங்கம் ஒன்று அமையப் பெற்றால், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஆட்சியில் பங்காளிகளாக மாறுமா எனக் கேள்வி எழுப்பப்பட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் அவ்வாறான பேச்சுக்கள் எதுவும் நடாத்தப்படவில்லை எனத் தெரிவித்துள்ள சுமந்திரன், அரசில் பங்காளிகளாக இணைந்து கொள்ளும் பேச்சுவார்த்தை ஒன்றுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாரில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். எனினும் தேசிய பிரச்சினையை தீர்க்க தேசிய அரசாங்கமே தற்போது நாட்டிற்கு தேவை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.